
விதவிதமான காரணங்களுக்காக விவாகரத்து கேட்பது தற்போது உலகம் முழுவதும் நடைபெற்று வரும் ஒன்றாகி விட்டது. அண்மையில் லண்டனை சேர்ந்த பிரபல செய்தித்தளம் ஒன்று ஒரு செய்தியை வெளியிட்டு இருக்கிறது. அதில் தான் வளர்க்கும் பூனை தன்னுடைய தந்தையின் மறுபிறவி என தான் கருதி வந்த நிலையில், அதை தனது கணவர் காப்பகத்தில் விட்டுவிட்டார் என்று அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் தனக்கு ஏற்பட்டுள்ள விரக்தியினால் கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டிருப்பதாகவும் அப்பெண் குறிப்பிட்டு இருக்கின்றார்.
இது குறித்து அந்தப் பெண் தனது பதிவில், ’பூனை குழந்தையாக இருக்கும்போது அதை மீட்டெடுத்தேன். அப்போது அது எனது உள்ளங்கையில் தவழத் தொடங்கியது. இரண்டாண்டுகளாக அது என்னுடன் இருந்தது. நான் இதை சொல்லும்போது பைத்தியக்காரத்தனமாகத் தோன்றலாம். ஆனால், எனது தந்தையின் மறுபிறவியாகவே அந்தப் பூனையை நினைத்திருந்தேன். அதன் கண்களைப் பார்க்கும் போதெல்லாம் பூனை என்பதைத் தண்டி, வேறொரு நல்லுணர்வு என்னுள் ஏற்படும். ஆனால், என் கணவருக்கு இது விசித்திரமாகவும் ஆரோக்கியமற்றதாகவும் தெரிந்துள்ளது. குறிப்பாக, எனது தந்தையின் ஆன்மா பூனைக்குள் இருப்பதாக நான் நம்புவது கணவருக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் என் அம்மா மற்றும் சகோதரியுடன் விடுமுறை காலத்தை கழிப்பதற்காக சுற்றுலா சென்றிருந்தேன். சுற்றுலா முடிந்து வீடு வந்து சேர்ந்தபோதுதான் என்னுடைய பூனை அங்கே இல்லாமல் போனது எனக்குத் தெரியவந்தது.
இதுபற்றி கணவரிடம் கேட்டபோது, பூனையை தன்னுடைய சக ஊழியரிடம் கொடுத்து விட்டேன் என்றார். இதனை அடுத்து அந்த நபரிடம் பூனையை திருப்பி கேட்டபோது, அவர் அந்தப் பூனையை கொடுக்க மறுத்துவிட்டார்’ என்று அந்தப் பெண் தனது பதிவில் தெரிவித்திருக்கிறார்.
பூனையை திருப்பி வாங்க முடியாததால் அந்தப் பெண் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். குறிப்பாக, தன்னை விட்டுப் பிரிந்திருக்கும் பூனை பென்ஜி எப்படி புது இடத்தில் வாழும் என்ற நினைப்பால் வேதனையில் இருந்திருக்கிறார். ஒருகட்டத்தில் பூனையை திரும்பப் பெற போலீசிடம் புகார் கொடுத்ததோடு, அதனை வாங்கியவரின் மனைவியிடம் விசாரித்திருக்கிறார். ஆனால் அவரும், ’இதுகுறித்து எந்தத் தகவலும் தெரியாது’ என்று கூறியிருக்கிறார்.
இதையெல்லாம் வைத்து அந்தப் பெண்ணின் கணவரிடம் போலீஸ் தீவிர விசாரணை செய்தபோது, பூனை பென்ஜியை தனது சக ஊழியரிடம் கொடுக்காமல், அதை ஒரு காப்பகத்தில் விட்டு விட்டதைச் சொல்லியிருக்கிறார். இதன் பிறகே அந்த மனைவி தனது கணவருக்கு விவாகரத்து நோட்டீஸ் விடுத்திருப்பதாகச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.