யூடியூப் தளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்களின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், இனி AI பதிவுகளால் எளிதில் பணம் ஈட்ட முடியாது என அதிகாரபூர்வமற்ற செய்திகள் வெளியாகின. தற்போது யூட்யூப் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.
சமீபக்காலமாக AIயின் வளர்ச்சி உச்சத்தை அடைந்திருக்கிறது. இன்று செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) அத்தியாவசிய ஒன்றாக மாறிவருகிறது. சாதாரண மக்களும் எளிதில் AI பயன்படுத்துகிறார்கள். தங்களது சந்தேகங்களையும், தங்களது கற்பனைகளையும் AI யிடமே பகிர்ந்துக்கொள்கிறார்கள். இவையனைத்தையும்விட AI மூலம் உருவாக்கப்படும் புகைப்படங்களே நல்ல வரவேற்பை பெறுகின்றன. இந்த படங்களையே பலரும் பயன்படுத்துகின்றனர். நாளுக்கு நாள் புது புது ஏஐ செயலிகள் அறிமுகமாகி வருகின்றன.
குறிப்பாக பல கதைகளையும் வரலாற்று கதைகளையும் ஏஐ-யை பயன்படுத்தி விஷ்வலாக உருவாக்கி சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்கள். இது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படியான நிலையில்தான், செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்படும் வீடியோக்களை யூட்யூபில் அப்லோட் செய்தால், அதற்கு வருமானம் வராது என்று செய்திகள் வெளியாகி வந்தன. இது சிலருக்கு வருத்தத்தை அளித்தாலும், பலருக்கு வரவேற்கத்தக்கதாக இருந்தது. ஏனெனில், ஏஐயின் ஆதிக்கம் யூட்யூபிலாவது தவிர்க்கப்படட்டும் என்று எண்ணினார்கள்.
இப்படியான நிலையில்தான், இதுகுறித்து யூட்யூப் தலையங்கப் பிரிவு தலைவர் ரெனே ரிச்சி பேசியிருக்கிறார். “இப்போதுள்ள Monetization விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. யூட்யூப் இனி ஒரிஜினல் உள்ளடக்கங்களை கொண்ட வீடியோக்களையே ஆதரிக்கும். போலி வீடியோக்கள் மற்றும் ஸ்பேம் வீடியோக்களுக்கு Monetization கொள்கையில் வருமானம் கிடைக்க தகுதியற்ற வீடியோவாக கருதப்படும். ஏஐ மூலம் உருவாக்கப்படும் வீடியோக்களுக்கு monetization இல்லை என்று சொல்லப்படுவது தவறான தகவல்.
AI மூலம் உருவாக்கப்படும் வீடியோக்களுக்கு வருமானம் நிறுத்தப்படாது. அதேசமயம் புதுமைகளை ஊக்குவிப்பதற்கும் ஸ்பேமை தடுப்பதற்கும் ஒரு சமநிலையை ஏற்படுத்த YouTube முயற்சி செய்கிறது என்றும், AI மூலம் உருவாக்கப்படும் படைப்புகளுக்கு தடைகளை உருவாக்க எப்போதும் யூடியூப் நினைத்ததில்லை.” என்றும் தெளிவுப்படுத்தினார்.