

சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை இன்னும் சில நாட்களில் அறிவிப்பேன் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான காலகட்டத்தில் அதிமுகவில் இரண்டாம் கட்ட தலைவராக கருதப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இன்றைய அரசியல் சூழலில் தன்னுடைய இருப்பை காப்பாற்ற வேண்டிய கட்டாய போராட்டத்தில் உள்ளார். இந்த சூழலில் எந்த கூட்டணியில் இணைய போகிறேன் என்பதை "தை பிறந்தால் வழி பிறக்கும் என செய்தியாளர்களிடம் கூறி வந்தார்.
இந்நிலையில் தேனியில் நடைபெற்ற ஜான் பென்னி குவிக்கின் 185வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டவர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பொழுது, அவரிடம் கூட்டணி அறிவிப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். தை பிறந்தால் வழி பிறக்கும். இன்று தான் தை பிறந்திருக்கிறது. தை மாதத்தில் 30 நாட்கள் உள்ளன. அந்த 30 நாட்களில் கூட்டணி குறித்து நல்ல செய்தி வரும் என்று கூறினார். இவரது இந்த கருத்து அரசியல் வட்டாரங்களில் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது. இதை அடுத்து எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு அதை மக்கள் தான் முடிவு செய்வார்கள் என்று பதிலளித்தார்.
இதையடுத்து எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தன் தேர்தல் நிலைப்பாடு, கூட்டணி குறித்து இன்னும் சில தினங்களில் அறிவிப்பதாக தெரிவித்தார். பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்திற்கு கலந்து கொள்ள தனக்கு அழைப்பு வரவில்லை என்றும், தான் எந்த ஒரு புதிய கட்சியையும் தொடங்கப் போவதாக இல்லை என்றும் அறிவித்தார். அத்துடன் இன்று இருக்கும் அதிமுக தலைமையால் திமுகவை வெல்ல முடியாது என்றும், அதிமுகவை மீட்டெடுக்க தான் நடத்தும் சட்ட போராட்டத்திற்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்றும் கூறினார்.
அதிமுக கூட்டணியில் தனக்கு இடமில்லை என எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக கூறியுள்ள நிலையில், பன்னீர்செல்வம் புதிய கூட்டணியை நோக்கி நகர்கிறார். அவர் திமுக அல்லது பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.