நாடு முழுவதும் மாவட்ட நீதிமன்றங்களில் சுமார் 6,000 நீதிபதி பதவிகள் நிரப்பபடாமல் காலியாக உள்ளன. 4.5 கோடி வழக்குகள் நிலுவையில் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
துணை நீதிமன்றங்களில் நீதிபதி பதவிக்கு அனுமதிக்கப்பட்ட இடங்கள் 25,042. ஆனால், டிசம்பர் 19 தேதிப்படி பணியில் இருக்கும் நீதிபதிகள் எண்ணிக்கை 19,192 தான். அதாவது 5,850 பணியிடங்கள் காலியாக உள்ளன என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் துணை நீதிமன்றங்களில் அதிகபட்சமாக 3,638 நீதிபதிகள் பணியில் இருக்கலாம். ஆனால் அங்கு 1,164 நீதிபதி பதவிகள் காலியாக உள்ளது என்கிறார் சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு.
பிகாரில் அனுமதிக்கப்பட்ட இடங்கள் 2,016, காலியாக உள்ளது 665. இதேபோல மத்தியப் பிரதேசத்தில் 497 (2021), குஜராத்தில் 428 (1582), ராஜஸ்தான் 331 (1587), தமிழகத்தில் 272 (1340) என பல்வேறு மாநிலங்களில் மாவட்ட நீதிமன்றங்களில் நீதிபதிகள் பதவி காலியாக உள்ளன.
வடமாநிலங்களில் பஞ்சாபில் காலியிடங்கள் 208 (797), தில்லி 203 (884), ஹரியானா 307 (772), இமாச்சல பிரதேசம் 14 (179), ஜம்மு –காஷ்மீர் 91 (314), லடாக் 8 (17) நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
அரசியலமைப்புச் சட்டம் 235 வது பிரிவின்படி மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களின் நிர்வாகம் உயர்நீதிமன்றத்திடம் உள்ளது. மேலும் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 309, 233 மற்றும் 234-ன் கீழ் அந்தந்த மாநில அரசுகள் உயர்நீதிமன்றத்துடன் கலந்து ஆலோசித்து நீதிபதிகள் நியமனம், பதவி உயர்வு மற்றும் இடஒதுக்கீடு தொடர்பான விதிமுறைகளை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றன.
சில மாநிலங்களில் நீதித்துறை அதிகாரிகள் நியமன விஷயத்தில் சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றமே முடிவு எடுக்கிறது. சில மாநிலங்களில் உயர்நீதிமன்றம், அந்த மாநில பணியாளர் தேர்வாணயத்துடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்கிறது. இதில் மத்திய அரசுக்கு நேரடியாக எந்த பங்கும் இல்லை என்கிறார் கிரண் ரிஜிஜு.
துணை நீதிமன்றங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் நிரப்பப்படுகின்றன. மாவட்ட நீதிபதிகளின் மற்றும் மூத்த சிவில் நீதிபதிகள் பணியிடங்கள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் இறுதிக்குள் நிரப்பப்பட்டு அறிவிக்கப்பட வேண்டும்.