
உலக பணக்காரர்களில் ஒருவரும், பெரும் தொழிலதிபருமான எலான் மஸ்க். இவரின் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், ‘ஸ்டார்லிங்க்’ என்னும் தொலைதொடர்பு சேவை நிறுவனத்தை தொடங்கி உலகில் பல நாடுகளுக்கு இணையச் சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது ஸ்டார்லிங் சேவை 32 நாடுகளில் வெற்றிகரமாகப் பயன்பாட்டில் உள்ளது.
நேரடியாக சாட்டிலைட் மூலம் இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை ‘ஸ்டார்லிங்க்’ வழங்குவதால் டவர் பயன்பாடு குறையும். மேலும் செயற்கைக்கோள் வழியாக இணைய சேவை அளிக்கப்படுவதால், இந்த இணைய சேவை நகரம், கிராமம் என பாகுபாடு இன்றி அனைத்து பகுதிகளுக்கும் ஒரே சீரான வேகத்தில் கிடைக்கும்.
‘ஸ்டார்லிங்க்’ என்பது பல ஆயிரக்கணக்கான செயற்கைகோள்களை உள்ளடக்கியது ஆகும். பூமிக்கு மிக நெருக்கமான (550 கி.மீட்டர் தொலைவில்)கீழ் வட்டப்பாதையில் இது சுற்றி வருகிறது. பூமிக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதால் இந்த ‘ஸ்டார்லிங்க்’ செயற்கை கோள் மூலமாக அதிவேக இணைய இணைப்பை வழங்க முடிகிறது.
‘ஸ்டார்லிங்க்’ சேவையைப் பெற விரும்பும் பயனர்கள் முதலில் அதன் கருவியை ரூ. 33 ஆயிரத்திற்கு வாங்க வேண்டும் என்றும், மாதந்தோறும் ரூ.3 ஆயிரத்திற்கு அன்லிமிடெட்டடு இணையச் சேவையைப் பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ‘ஸ்டார்லிங்க்’ சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்தியாவில் ‘ஸ்டார்லிங்க்’ தொழில்நுட்பத்தின் நுழைவு ஏற்கனவே உள்ள தொலைத்தொடர்பு சேவைகளுக்கு சவால் விடும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. அதுமட்டுமின்றி ‘ஸ்டார்லிங்க்’ வருகையால் வாடிக்கையாளர்களை இழப்பது குறித்த கவலையும் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடையே அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் இந்தியாவில் நுழைய உள்ள ‘ஸ்டார்லிங்க்’ சேவை முக்கியமாக பி.எஸ்.என்.எல்லுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கருத்து உலா வந்த நிலையில் இது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் ஸ்டார்லிங்க் நுழைய இருப்பது, அரசு நடத்தும் பிஎஸ்என்எல் அல்லது பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தாது, ஏனெனில் இது இந்தியாவில் 20 லட்சம் இணைப்புகளுக்கு மட்டுமே சேவை செய்ய முடியும் என்று தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் பெம்மாசானி சந்திர சேகர் கூறினார்.
‘ஸ்டார்லிங்க்’ 200 Mbps வரை வேகத்தை வழங்குகிறது. அது தொலைத்தொடர்பு சேவைகளைப் பாதிக்காது. சாட்காம் சேவைகளுக்கான முன்கூட்டிய செலவு மிக அதிகமாக இருக்கும், மேலும் மாதாந்திர செலவு சுமார் ₹3,000 ஆக இருக்கலாம். எனவே ஸ்டார்லிங்கால் அனைவருக்கும் சேவை செய்ய முடியாது என்று அமைச்சர் கூறினார்.
பி.எஸ்.என்.எல். கிராமப்புறங்கள் மற்றும் தொலைதூர பகுதிகளில் தரைவழி நெட்வொர்க் மூலம் மக்களுக்கு சேவையை வழங்குகிறது. அதே சமயம், ஸ்டார்லிங்க் உயர்விலை கொண்ட செயற்கைகோள் இணைய சேவையை மட்டுமே வழங்கும் என்பதால், வெவ்வேறு வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டுள்ளன என விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2000-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) என்பதன் சுருக்கமான பி.எஸ்.என்.எல். இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமாகும். ஜியோ, ஏர்டெல் போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் டேட்டா பேக், அன்லிமிட்டெட் போன்கால்கள் என ஆஃபர்களை அள்ளி வீசி வாடிக்கையாளர்களை பெருக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், அரசின் சொந்த தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல், இந்தியா முழுவதும் 4ஜி சேவையை தரவே இன்னும் தடுமாறி கொண்டிருக்கிறது.
ஒரு காலத்தில் லேண்ட் லைன் அல்லது போன் வைத்திருந்த பெரும்பாலான இந்தியர்களின் சாய்ஸ் பி.எஸ்.என்.எல் தான். ஆனால், இந்தத் துறைக்குள் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வர வர பி.எஸ்.என்.எல் பின்னோக்கி செல்லத் தொடங்கியது என்றே சொல்ல வேண்டும்.
‘ஸ்டார்லிங்க்’ வருகை பி.எஸ்.என்.எல்லுக்கு மட்டுமல்ல இந்தியாவில் கோலோச்சி வரும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நெருக்கடியாக அமையும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி தற்போதைய உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களின் விலை உயர்வால் அதிருப்தி அடைந்துள்ள பயனர்களுக்கு ‘ஸ்டார்லிங்க்’ கவர்ச்சிகரமான மாற்றீட்டை வழங்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.