மல்லிகார்ஜூன கார்கே -  சோனியா காந்தி
மல்லிகார்ஜூன கார்கே - சோனியா காந்தி

தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி: கார்கே உறுதி

Published on

ரும் நவம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியமைப்பது உறுதி என்று அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். பா.ஜ.க. ஆட்சி செய்யும் மத்தியப் பிரதேசத்தில் எதிர்ப்பு அலை வீசுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிஜோரம் மற்றும் தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களில் வரும் நவம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.

மிஜோரத்தில் நவம்பர் 7, சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17, மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17, ராஜஸ்தானில் நவம்பர் 25 மற்றும் தெலங்கானாவில் நவம்பர் 30 ஆம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

இந்நத நிலையில் கர்நாடக மாநிலம், கலாபுர்கியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் சந்திக்க காங்கிரஸ் தயாராகி வருகிறது.

தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என்று நம்புகிறோம். இந்த மாநிலங்களில் பணவீக்கம், வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் பா.ஜ.க. எதிர்ப்பு அலை வீசுகிறது. ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் உள்ள காங்கிரஸ் அரசுகள் சிறப்பாக செயல்படுவதால் அங்கு எந்த பிரச்னையும் இல்லை. மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க.வுக்கு எதிரான அலை வீசுகிறது.

மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. அரசு தேர்தல் வாக்குறுதிகள் எதையும் முழுமையாக நிறைவேற்றவில்லை. வேலையின்மையை போக்குவோம் என்றார்கள். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்றார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை என்றார்.

மேலும் கர்நாடக மாநிலத்தை மத்திய அரசு புறக்கணித்து வருகிறது. அங்கு எந்த மத்திய திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்றார் கார்கே.சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இடையேதான் முக்கிய போட்டியாகும். தெலங்கானாவில் ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. என மும்முனைப் போட்டி நிலவுகிறது.

மத்தியப் பிரதேசத்தில் 2018 தேர்தலில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் காங்கிரஸ் 114 இடங்களில் வென்றது. பா.ஜ.க. 109 இடங்களில் வெற்றிபெற்றது. காங்கிரஸ் அங்கு ஆட்சியமைத்த போதிலும் 2020 ஆம் ஆண்டில் ஜோதிர் ஆதித்ய சிந்தியா உள்ளிட்ட சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறியதை அடுத்து அங்கு கமல்நாத் தலைமையிலான அரசு கவிழ்ந்து சிவராஜ் சிங் தலைமையில் பா.ஜ.க. அரசு பதவியேற்றது.

ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 200 தொகுதிகள் உள்ளன. அங்கு 2018 தேர்தலில் காங்கிரஸ் 99 தொகுதிகளில் வென்றது. பா.ஜ.க.வுக்கு 73 இடங்களே கிடைத்தன. எனினும் பகுஜன் சமாஜ் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக அசோக் கெலோட் பதவியேற்றார்.

தெலங்கானாவில் 2018 தேர்தலில் ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி 119 தொகுதிகளில் 88 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் 19 இடங்களில் வென்றது.சத்தீஸ்கர் மாநிலத்தில் 2018 தேர்தலில் காங்கிரஸ் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 68 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்தது. பா.ஜ.க.வுக்கு 15 இடங்களே கிடைத்தன.

2018 தேர்தலில் மிஜோரம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் மிஜோ தேசிய முன்னணி 26 தொகுதிகளைக் கைப்பற்றியது. காங்கிரஸ் 5 இடங்களிலும் பா.ஜ.க. ஒரு இடத்திலும் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com