காஷ்மீர் மாநிலம், பூஜ் பகுதியில் கடந்த வாரம் தீவிரவாதிகள் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் ஐந்து இந்திய ராணுவ வீரர்கள் அகால மரணமடைந்தனர். இந்தத் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் தூதர் அப்துல் பாசித் கருத்துத் தெரிவிக்கையில், “பூஜ் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மீண்டும் ஒரு சர்ஜிகல் ஸ்ட்ரைக் அல்லது விமானப் படை தாக்குதலை தங்கள் நாட்டின் மீது இந்தியா நடத்தும் என பாகிஸ்தான் மக்கள் பேசி வருகின்றனர்.
ஆனால், அப்படி ஒரு அதிரடி முடிவை இந்தியா தற்போது எடுக்காது. ஏனென்றால், சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு தங்கள் நாட்டிலும் நடைபெற இருக்கும் நிலையிலும், ஜி20 அமைப்பின் தலைமை பதவியை வகிக்கும் நிலையிலும் இப்போது சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தும் முடிவை இந்தியா ஒருபோதும் எடுக்காது,
ஆனால், அடுத்த 2024ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக பாகிஸ்தான் மீது ஒரு தாக்குதல் நடத்த வாய்ப்பு இருக்கிறது” என அவர் கருத்துத் தெரிவித்து இருக்கிறார்.
முன்னதாக, 2019ல் புல்வாமாவில் துணை ராணுவப் படையினரை பயங்கரவாதிகள் தாக்கியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மீது, இந்தியா சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தியது குறிப்பிடத்தக்கது.