பொருளாதாரச் சிக்கலில் தள்ளாடும் பாகிஸ்தான், இந்தியாவால் உதவ முடியுமா?

பாகிஸ்தான்
பாகிஸ்தான்

வரலாறு காணாத அளவுக்கு பாகிஸ்தான் பணவீக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விலை குறியீட்டு எண் 31.5 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இதன் காரணமாக உணவுப் பொருட்கள், போக்குவரத்து செலவுகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கூட ஏறக்குறைய பாதி அளவு உயர்ந்திருக்கின்றன.

ஐந்தாண்டுகளுக்கு முன்னர் 3.9 சதவீதமாக இருந்த நுகர்வோர் விலை குறியீட்டு எண் பின்னாளில் படிப்படியாக உயர்ந்து வந்தது. இலங்கை, பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டபோது பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரித்தது. அதைத் தொடர்ந்து ஒரே ஆண்டில் 4 சதவீதத்திலிருந்து 30 சதவீதத்தை தொட்டிருக்கிறது.

நிதியாண்டு முடிவடையும் நேரத்தில் உணவுப்பொருட்களின் விலை தொடர்ந்து ஏற்றம் காண வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பாக ரமலான் நோன்பு நேரத்தில் உணவுப்பொருட்கள் விலை உச்சத்தில் இருக்கும் என்றும் பாகிஸ்தானின் உள்ளூர் வணிகர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.

1973 - 1974 காலகட்டங்களில்தான் 32 சதவீதம் வரை நுகர்வோர் விலை குறியீடு இருந்ததாகவும் ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு அத்தகையதொரு சரிவு நிலையை பாகிஸ்தான் எதிர்நோக்கியிருப்பதாக அந்நாட்டைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டு வர, பாகிஸ்தான் அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. சரக்கு வரி விகிதத்தை பெருமளவு குறைத்தது. ஆனால், எதிர்பார்த்த மாற்றங்களை கொண்டு வரமுடியவில்லை. நிலைமையை சமாளிக்க உலக வங்கியிடமிருந்து ஒரு பில்லியன் டாலர் நிதியுதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

இந்நிலையில் பஞ்சாப் உள்ளிட்ட மகாணங்களில் அடுத்து வரும் மூன்று மாதங்களுக்குள் தேர்தலை நடத்தி முடிக்குமாறு பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடி தொடரும் நேரத்தில் தேர்தலை எப்படி நடத்துவது, அதற்கான செலவுகளை எப்படி சமாளிப்பது என்பதில் பாகிஸ்தான் அரசு சிக்கித் தவிக்கிறது.

இலங்கை உள்ளிட்ட நாடுகள் பொருளாதார வீழ்ச்சியை அடைந்தபோது, இந்தியா தன்னுடைய பங்காக நிதியுதவி செய்தது. ஆனால், பாகிஸ்தான் விஷயத்தில் அப்படி செய்வதற்கு வாய்ப்பில்லை என்கிறார்கள், இந்திய வெளியுறத்துறை அதிகாரிகள். பாகிஸ்தானும் இந்தியாவிடம் உதவி கேட்டு இதுவரை எந்த கோரிக்கையும் விடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com