பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளார், OpenAi நிறுவனத்தின் CEO.

பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளார், OpenAi நிறுவனத்தின் CEO.

OpenAi நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சாம் அல்ட்மேன் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேச இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. 

தற்போது உலகிலுள்ள எல்லா மூளைகளிலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பேச்சுதான் அதிகரித்து வருகிறது. அந்த அளவுக்கு இந்த தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதை வெறும் தொழில்நுட்பம் என சொல்லி நாம் சுருக்கிவிட முடியாது. இதுவரை மனிதர்கள் கண்டிராத மிகப்பெரிய வளர்ச்சிக்கு இது காரணமாக இருக்கும் என சொல்லப்பட்டு வரும் வேளையில், இதனால் மனிதர்களுக்கு ஆபத்தும் ஏற்படும் என யூகிக்கப் பட்டுள்ளது. 

தொடக்கத்தில் இதுகுறித்து பெரிதாக யாரும் கவலைப்படாத நேரத்தில், OpenAi நிறுவனம் மூலமாக உருவாக்கப்பட்ட ChatGPT வருகைக்குப் பிறகு, இந்தத் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியையும், அதனால் ஏற்படப்போகும் ஆபத்தையும் மக்கள் புரிந்துகொள்ளத் தொடங்கினர். நாம் நினைத்துப் பார்க்க முடியாத பல மைல் கல்லை சில மாதங்களிலேயே ChatGPT எட்டிவிட்டது. தற்போது கோடிக்கணக்கான மக்கள் இதைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். 

அதேபோல பல்லாயிரக்கணக்கான தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் இதன் வருகையால் தங்கள் பணியை இழந்து வருகின்றனர். எனவே பல்வேறு நாடுகளும் இந்த தொழில்நுட்பத்திற்கு கட்டுப்பாடுகளை விதிக்கத் திட்டமிட்டு வருகின்றனர். இந்த நிலையில் தான் OpenAi நிறுவனத்தின் சிஇஓ கத்தார், ஐக்கிய அரபு நாடுகள், இந்தியா, ஜோர்டன், தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லவிருப்பதாக அறிவித்தார். எனவே தற்போது ஐஐடி டெல்லியில் நடைபெறும் நிகழ்வில் கலந்துகொள்ள இந்தியா வந்திருக்கிறார். நாட்டின் முக்கியத் தொழில்நுட்ப நிறுவனங்களின் சிஇஓ மற்றும் தொழில் முனைவோர் களையும் சந்திக்க இருக்கிறார். அதேபோல மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் நிர்வாகிகளையும், பிரதமர் மோடியையும் அவர்களது அலுவலகத்திற்குச் சென்று சாம் அல்ட்மேன் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. 

இந்த சந்திப்பில் இந்தியாவில் OpenAi நிறுவனம் எதிர்காலத்தில் மேற்கொள்ளவிற்கும் திட்டங்கள் குறித்து, இவர் ஆலோசிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு, செயற்கை நுண்ணறிவுத் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் தொடக்கப் புள்ளியாக அமையும் என பலர் கூறுகின்றனர். 

அதேபோல, ChatGPT தொழில்நுட்பத்தில் கொண்டு வர வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து மத்திய அரசுத் தரப்பில் பல கோரிக்கைகள் முன்வைக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com