
நித்யானந்தா உயிரிழந்துவிட்டதாக தகவல் பரவி வந்த நிலையில், இன்று இரவு அவர் நேரலையில் தோன்றுவார் என கைலாசா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் பிறந்த நித்யானந்தா, கர்நாடகாவிற்கு சென்று ஆன்மீக சொற்பொழிவுகளை நடத்தி வந்தார். அங்கு மிகவும் பிரபலமான இவர், பின்னர் உலகம் முழுக்க பிரபலமானார். வெளிநாட்டினர் பலரும் இவரின் சொற்பொழிவுக்கு அடிமையாகினர். இதனைத்தொடர்ந்து புகழ் மற்றும் பணம் கூரையை பிய்த்து கொட்டத் தொடங்கியது. ஆனால், சில காலங்களுக்கு பிறகு அவர்மீது விமர்சனங்கள் எழ ஆரம்பித்தன. குறிப்பாக சீடர்கள் இவர்மீது பாலியல் புகார்கள் பதிவிட்டனர். இதனால், அவர் மிகவும் தேடப்பட்ட நபரானார். நித்யானந்தா இந்தியாவிலிருந்து தலைமறைவாகி, ஒரு தீவையே உருவாக்கினார். அந்தத் தீவுக்கு கைலாசா என்று பெயர் வைத்தார். இது ஒரு இந்துக்களுக்கான நாடு என்றும், தனி கரன்சி, பாஸ்போர்ட், கொடி ஆகியவற்றை உருவாக்கியிருப்பதாகவும் தெரிவித்தார். தொழில் தொடங்க வருமாறு தமிழக மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளாகவே அவர் டயாலிசிஸ் சிகிச்சை எடுத்துக்கொண்டு வருவதாகவும், சில ஆண்டுகளாக படுத்தப் படுக்கையாகிவிட்டார் என்றும் செய்திகள் வந்தன. ஆனால், இதனை யாரும் உறுதி செய்யவில்லை. இதேபோல்தான் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அவர் இறந்துவிட்டதாக செய்திகள் வந்தன. ஆனால், அவர் அதை மறுத்து ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.
அண்மையில் பொலிவியா நாட்டில், நில ஒப்பந்த விவகாரத்தில் அந்நாட்டு அரசு மோசடி குற்றச்சாட்டு சுமத்தியதுடன் நித்யானந்தாவின் பல பிரதிநிதிகளை நாட்டை விட்டும் வெளியேற்றியது. இப்படியாக கைலாசா குறித்த சர்ச்சைகள் தொடர்ந்த நிலையில், உடல்நலக்குறைவால் நித்யானந்தா மரணமடைந்ததாக தகவல் உலா வந்தது. இந்து தர்மத்தை காப்பதற்காக நித்யானந்தா உயிர் தியாகம் செய்து சமாதி அடைந்து விட்டதாக நித்யானந்தாவின் உறவினர் என கூறப்படும் சுந்தரேஸ்வரன், வீடியோ வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தகவல் உண்மையா, பொய்யா, வழக்கமான புரளியா என தெரியாமல் அவரது சீடர்கள் உள்ளிட்ட பலரும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து முகநூலில் விளக்கம் அளித்துள்ள கைலாசா, நித்யானந்தா ஆரோக்கியமாக உள்ளதாகவும் மார்ச் 30ஆம் தேதி நடந்த உகாதி விழாவில் அவர் நேரலையில் பக்தர்களுக்கு ஆசி வழங்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நித்யானந்தாவுக்கு எதிரானவர்களின் முயற்சிகள் தோல்வியடைந்ததாகவும், அதனால் அந்த தரப்பினர் தவறான தகவல்கள் பரப்பும் போக்கிற்கு மாறியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கைலாசா தரப்பு வெளியிட்டுள்ள முகநூல் பதிவு மூலமாக, நித்யானந்தாவின் உடல்நிலை குறித்து பரவிய தகவல்களுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று (ஏப்.2) மாலை 7 மணி அளவில் நித்யானந்தா நேரலையில் தோன்றுவார் என்று அவரது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், "நித்யானந்தா மீது தொடுக்கப்பட்ட வதந்திகள் உலகம் முழுவதும் கேள்விகளையும், ஊகங்களையும், உண்மையை அறிய கூர்ந்த ஆர்வவத்தையும் எழுப்பி உள்ளது. இந்நிலையில், நித்யானந்தா இன்று மாலை நேரலையில் தோன்றுவார்" என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, நித்யானந்தா பேசுவது போன்ற வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. அதில், "கடந்த சில நாட்களாக நான் உயிரோடு இல்லை என்று தகவல் பரப்படுகிறது. இப்போது எனக்கே சந்தேகமாக உள்ளது. நான் உயிரோடு இருக்கிறேனா இல்லையா என்பதை முடிவு பண்ணி சொல்லுங்கள்" என்று பேசியுள்ளார்.