ஆளுநர் பதவி கொடுத்து ஓபிஎஸ்ஸை தேற்றுமா பாஜக..?

ஆளுநர் பதவி கொடுத்து ஓபிஎஸ்ஸை தேற்றுமா பாஜக..?

“அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும்” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஆதரவாளர்கள், வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அத்துடன் ஒரு சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்த பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை நடத்தி ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டத்தை ரத்து செய்து தனி நீதிபதி தீர்ப்பு வெளியிட்டார்.

இதை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி அணியினர் உச்ச நீதிமன்றம் சென்றனர்.

உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் ஜனவரி 11ம் தேதி நிறைவடைந்தது. பின்னர் எழுத்துப்பூர்வ வாதங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் வைத்திருந்தனர்.

இந்நிலையில் இன்று அதிமுகவில் நிலவிய ஒற்றைத் தலைமை பிரச்சனை குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சஞ்சய் குமார் அமர்வு இந்த தீர்ப்பை வெளியிட்டுள்ளது.

“ஜூலை 11ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு செல்லும்” என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக ஓபிஎஸ் உள்ளிட்டோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இன்று காலை வெளியான இந்த தீர்ப்பினால் ஓபிஎஸ் அணியினர் அதிர்ச்சியில் உள்ளனர். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

இதற்கு அடுத்து ஓபிஎஸ்-இன் நகர்வு எப்படி இருக்கும் என்பதற்கு சில சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஒன்று, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு செல்லலாம். ஆனால், அந்த மனுவை மீண்டும் உச்ச நீதிமன்றம் ஏற்க வாய்ப்பு மிக மிக குறைவு. பொதுவாக கட்சி உரிமை சார்ந்த விவகாரங்களை நீதிமன்றங்கள் மீண்டும் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள விரும்பாது. அப்படி எடுத்தாலும், கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை, வாக்கு வங்கியை காரணம் வைத்து எடப்பாடிக்குதான் மீண்டும் சாதகமான உத்தரவு வரும்.

 இந்நிலையில், உதயநிதி குறிப்பிட்டதை போல ஓபிஎஸ்-க்கு ஆளுநர் பதவி காத்திருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசும்போது, அறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு இவர்கள் உண்மையாக இல்லை. ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் சட்டமன்றத்தில் எனது காரை எடுத்துக்கொண்டு கமலாலயம் செல்ல மாட்டோம் என கூறிவிட்டு இன்று இருவரும் கமலாயம் சென்று தவம் கிடக்கிறார்கள். 

பாஜக அலுவலகம் கட்சி அலுவலகம் கிடையாது, அது ஒரு பயிற்சி சென்டர். ஏனென்றால், அங்கிருந்த இல.கணேசன் கவர்னர் ஆகிவிட்டார், அடுத்து தமிழிசை கவர்னர் ஆகிவிட்டார். இன்னொருவர் மத்திய இணை அமைச்சர் ஆனார். தற்போது சிபி ராதாகிருஷ்ணன் கவர்னர் ஆகியுள்ளார். அதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் கவர்னராக அறிவிக்கப்படுவார் என்று உதயநிதி கூறியதுதான் நடக்கும் என்று கணிப்புகள் எழுந்துள்ளது.

மேலும், ஓபிஎஸ்-ன் இந்த நிலைமைக்கு யார் காரணம் என்று அரசியல் அரங்கில் அனைவருக்கும் தெரியும். எனவே, டெல்லியில் இருந்து கவர்னர் ஆஃபர் வந்தால் ஓபிஎஸ் ஏற்காமலா இருப்பார்? என்ற கணக்குகளும் போடப்பட்டு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com