அரசியலில், கட்சி நிர்வாகிகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்திற்கு ஈடாக இளைஞர் அணிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவது வழக்கம். அப்படி இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சிகளே அடுத்த கட்டத்திற்கு நகரும் என்பதும் எதார்த்தம்.
திமுகவை பொருத்தவரை தற்போதைய முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினும் இளைஞர் அணி செயலாளராக பொறுப்பு வகித்தவர். அதை தொடர்ந்து தற்போதைய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணி செயலாளராக பொறுப்பை வகித்துவருகிறார்.
உதயநிதி பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்தும் கூட குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு பெரிய நிகழ்ச்சிகள் ஒன்றும் நடத்தப்படவில்லை. திமுக தலைவரை அழைத்து க்கூட முக்கிய நிகழ்ச்சிகள் நடத்தாதது, சில மாவட்டங்களில் பல ஆண்டுகளாக நிர்வாகிகள் நியமிக்கப்படாமல் இருந்தது பேன்றவை திமுகவினர் மத்தியில் இளைஞரணியின் செயல்பாடுகள், முன்னெடுப்புகள் குறித்த கேள்வி எழுப்பியது.
இந்த நிலையில் திமுக இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட 609 பொறுப்புகளுக்கு புதிய நபர்களை தேர்வு செய்து அறிவித்து இருக்கிறது.
அதோடு இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு ஒரு மடலையும் எழுதி இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். அதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் கூறி இருப்பது, இளைஞர் அணி நிர்வாகிகளை தேர்வு செய்யும் பொறுப்பு அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. 72 மாவட்டங்களில் இருந்து 4,158 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அந்த விண்ணப்பங்கள் ஒவ்வொன்றையும் தகவலாக சேர்த்து ஆவணங்களாக மாற்றினோம். அதை 9 மண்டலங்களாக பிரித்து, நேர்காணலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. இதில் சென்னை, கோவை, மதுரை, தஞ்சாவூர், திருச்சி, சேலம் உள்ளிட்ட மண்டலங்களினுடைய நேர்காணல் மிகவும் கடினமானதாக இருந்தது.
அதில் கலந்து கொண்ட இளைஞர்கள் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் கட்சி உறுப்பினர் அட்டைகளை அடுக்கடுக்காக எடுத்து வந்து காட்டியது, தங்கள் செய்த பணிகளை ஆல்பமாகவும், மினிட் நோட்டில் எழுதி வைத்தவைகளைக் காட்டியதும் உணர்ச்சிகரமாக இருந்தது. இவை எல்லாம் கவனமாக ஆராய்ந்தால் காலதாமதம் ஏற்பட்டது. முதல்வர் காலதாமதத்தை சுட்டிக் காட்டிய பொழுதும் சரியான நபர்களை தேர்வு செய்வதற்கு நாங்கள் எடுத்த மெனக்கெடல் காரணமாக இந்த காலதாமதம் என்பதை கூறி நீண்ட நாள் தாமதத்திற்கு பிறகு சரியான நிர்வாகிகளை தேர்வு செய்துள்ளோம்.
நம்முடைய இலக்கு 40க்கு 40 என்று கடிதத்தில் எழுதி உள்ளார். இதன் மூலம் திமுக இளைஞரணியை உதயநிதி ஸ்டாலின் அடுத்த கட்ட பரிணாமத்திற்கு நகர்த்தி செல்கிறார் என்பது அறியப்படுகிறது. அவருடைய தேர்வு எந்த அளவுக்கு வெற்றியை தரும் என்பதை 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் காட்டிவிடும், பொறுத்திருந்த பார்ப்போம்.