
குஜராத் மாநிலம் ஆமதாபாதில், நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது.
எனினும் உலக கோப்பை போட்டி தொடரில் நாக் அவுட் போட்டிகள் அனைத்திலும் இந்தியா அபார வெற்றிபெற்றது. இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்தை ரசிகர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள் என பலரும் அங்கீகரித்து வரவேற்றுள்ளனர்.
இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த போதிலும் இந்த தொடரில் இந்தியாவின் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
உலக கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியையும் அவர் பாராட்டியுள்ளார். ஆஸி. அணியின் பந்துவீச்சு, பீல்டிங் சிறப்பாக இருந்தது. குறிப்பாக டிராவிஸ் ஹெட்டி பேட்டிங் சூப்பராக இருந்த்து என்று பிரதமர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இதர அரசியல்கட்சித் தலைவர்களும் இந்திய அணியின் செயல்பாட்டை பாராட்டியுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி, “இந்த போட்டித் தொடர் முழுவதுமே இந்திய அணியினர் சிறப்பான ஆட்டத்தை கொடுத்தனர். வெற்றியோ, தோல்வியோ நாங்கள் உங்கள் பக்கம் இருக்கிறோம்”.
கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு எங்கள் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “இந்த உலக கோப்பை போட்டித்தொடர் முழுவதும் இந்திய அணியினர் மறக்க முடியாத ஆட்டத்தை தந்தனர். வெற்றியானாலும், தோல்வியானாலும் அதை ஏற்றுக்கொள்வதுதான் உண்மையான விளையாட்டு வீர்ர்களின் பண்பாகும். இனி வரும் காலங்களில் இந்திய கிரிக்கெட் அணி மேலும் வலிமை பெற்று சாதனை புரியம் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
“விளையாட்டில் தோல்வி சகஜம்தான். வெற்றி நம் கையை விட்டு நழுவினாலும் இந்திய அணியினர் எழுச்சியுடன் விளையாடியது பாராட்டத்தக்கது. இந்திய அணியினர் கடைசி பந்துவரை திறமையை வெளிப்படுத்தி மன உறுதியுடன் விளையாடினர்.” என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகுர் கூறியுள்ளார்.
“இந்திய அணி கோப்பையை வெல்லமுடியாமல் போயிருக்கலாம். ஆனால், அவர்களின் பயணம் முடிவில்லாதது. அவர்கள் கடுமையாக விளையாடி திறமையை வெளிப்படுத்தினார்கள். உலக கோப்பை போட்டித் தொடரில் இந்தியாவின் ஆட்டம் பெருமைப்படும் வகையிலேயே இருந்தது” என்று தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
“உலக கோப்பை போட்டித் தொடரில் இந்தியா கோப்பை வெல்ல முடியாவிட்டாலும் மக்கள் மனதை வென்றுவிட்டனர்.” என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். உங்கள் திறமையான ஆட்டத்தை நாங்கள் நேரில் பார்த்தோம். அதற்காக ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படுகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் சிறந்த அணி. இதில் கேள்விக்கே இடமில்லை என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சசி தரூர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் விடாமுயற்சி, எழுச்சியான ஆட்டம், ஒருங்கிணைப்பு ஆகியவற்றை உலக கோப்பை போட்டித் தொடரில் நேரில் கண்டோம். இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தாலும் உங்களின் சாதனையை எந்தவிதத்திலும் குறைத்து மதிப்பிட முடியாது என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
உலக கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று கோப்பையை தட்டிச் சென்றது. இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வி கண்டாலும் முன்னதாக நடைபெற்ற 10 போட்டிகளிலும் இந்தியா வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.