

2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் துபாய் விமான கண்காட்சி கடந்த 17-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த போர் விமானங்கள் உள்பட பல்வேறு விமானங்கள் பங்கேற்றுள்ளன. இதில் இந்தியாவின் தரப்பில், தேஜஸ் ரக போர் விமானம், வானை தொட்டு சாகசங்கள் செய்து அசத்தியது. இது விமான கண்காட்சிக்கு வந்திருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில், துபாய் விமான கண்காட்சியில் நேற்று இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் வானில் வட்டமடித்து சாகசம் செய்து கொண்டிருந்தபோது கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
நேற்று மதியம் 2.10 மணியளவில் சாகச செயலில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நடைபெற்றது. இதில் தேஜஸ் போர் விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
இதில் விமானம் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் விமானத்தை இயக்கிய விமானி உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுள்ளது. கண் இமைக்கும் நேரத்தில் தேஜஸ் விமானம் கீழே விழுந்து தீப்பிடித்ததால் அதனை இயக்கிய விமானி தப்ப முடியாமல் போனது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், விமான விபத்தில் உயிரிழந்த விமானி யார் என்ற விவரம் தெரியவந்துள்ளது. உயிரிழந்த விமானி இமாச்சல பிரதேசம் காங்க்ரா மாவட்டத்தைச் சேர்ந்த நம்னாஷ் சியால் என தெரியவந்துள்ளது. இதை இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் உறுதிபடுத்தியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் சுக்விந்தர் சிங் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ‘துபாய் விமான கண்காட்சியில் தேஜஸ் விமான விபத்தில் இமாச்சல பிரதேசம், காங்க்ரா மாவட்டத்தைச் சேர்ந்த துணிச்சலான விங் கமாண்டர் நம்னாஷ் சியால் உயிரிழந்த செய்தி மிகவும் மன வேதனையையும், ஆன்மாவை நொறுக்குவதாகவும் உள்ளது. நம் தேசம் ஒரு துணிச்சலான, கடமை உணர்வு கொண்ட விமானியை இழந்துவிட்டது’ என்று பதிவிட்டுள்ளார்.
விமான கண்காட்சியின்போது விமானம் விபத்தில் சிக்கியதற்கான காரணம் குறித்து கண்டறிய விசாரணை குழு அமைத்து இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ளது.