ஆடம்பர திருமண செலவைத் தவிர்த்து, ஏழைக் கல்விக்கு உதவிய கோடீஸ்வரர்!

ஆடம்பர திருமண செலவைத் தவிர்த்து, ஏழைக் கல்விக்கு உதவிய கோடீஸ்வரர்!
Published on

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் இயங்கி வரும் மௌலான ஆசாத் பல்கலைக்கழகத்தின் தலைவர் மொகமத் ஆதிக். இவர் பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருவதால் பொருளாதார ரீதியாக மிகவும் வசதியாக வாழ்ந்து வருபவர். சமீபத்தில் இவர் தனது பேத்தி கதீஜாவின் திருமணத்தை நடத்தி வைத்தார். ‘மொகமத் ஆதிக் தனது பேத்தியின் திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக நடத்துவார்’ என்று பலரும் எதிர்பார்த்திருந்த வேளையில், அவர் அவ்வாறு நடத்தாமல் மிகவும் எளிய முறையில் அந்தத் திருமணத்தை மசூதி ஒன்றில் நடத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார்.

திருமணம் என்பது இப்போது ஆடம்பரமான ஒன்றாக மாறிவிட்டது. சாப்பாட்டுக்கே பல லட்ச ரூபாயை சர்வ சாதாரணமாக செலவு செய்கிறார்கள். ஆனால், பெரும் பணக்காரராக இருந்தும் மொகமத் ஆதிக், தனது வீட்டுக் கல்யாணத்தில் அதுவும் தனது பேத்தி திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு சாப்பாடு கூட போடவில்லை. அதற்கு மாறாக, திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு உலர்ந்த பேரீட்சை பழமும், பழ கிரீமும் மட்டுமே வழங்கப்பட்டது.

திருமணத்துக்கு ஆகும் செலவுத் தொகையைக் கொண்டு தனது பேத்தி பெயரில் ஒரு தொண்டு நிறுவனத்தை ஆரம்பிக்க அவர் முடிவு செய்துள்ளார். இதன் மூலம் தனது குடும்ப திருமண பாரம்பர்யத்தை உடைத்து, உறவினர்கள் மற்றும் நண்பர்களை மட்டும் அழைத்து, விருந்தைக் கூட தவிர்த்து எளிய முறையில் திருமணத்தை நடத்தி முடித்துள்ளார். தனது பேத்தி பெயரில் அமைக்கப்படும் தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏழைக் குழந்தைகளின் படிப்புச் செலவுக்கு உதவி செய்ய முடிவு செய்துள்ளார் கல்வியாளர் மொகமத் ஆதிக்.

இது குறித்து அவர், ‘பெண் சிசு வதைக்கு எதிரான விழிப்புணர்வு நோக்கிலும், ஆண், பெண் பாகுபாட்டைப் போக்கவும், மகள்களுக்கும் பூர்வீக சொத்தில் பங்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், வரதட்சணைக்கு எதிரான செயல்பாடாகவும், எங்கள் குடும்பத்தில் நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வந்த திருமண பாரம்பர்யத்தைத் தகர்த்து, எளிய முறையில் இந்தத் திருமணத்தை நடத்தி இருக்கிறேன்'' என்று கூறுகிறார்.

இந்தத் திருமணத்தில் அரசியல் தலைவர்கள் உட்பட, முக்கியமான பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திருமணம் சமூகத்துக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்று அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com