நூறு நாள் வேலை கிடைக்காததால் பேருந்தில் இருந்து குதித்து பெண் தற்கொலை: மூன்று பேர் மீது வழக்குப் பதிவு!

நூறு நாள் வேலை கிடைக்காததால் பேருந்தில் இருந்து குதித்து பெண் தற்கொலை: மூன்று பேர் மீது வழக்குப் பதிவு!

துரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி நாகலட்சுமி. இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர். வறுமையில் இருந்த தனது குடும்பத்தைக் காப்பாற்ற மாவட்ட ஆட்சியரிடம் வேலை கேட்டு மனு கொடுத்துள்ளார் நாகலட்சுமி. இதனை பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் திருமங்கலம் அருகே உள்ள மையிட்டான்பட்டி பஞ்சாயத்தில் நூறு நாள் வேலை திட்ட பணித்தள பொறுப்பாளராக நாகலட்சுமிக்கு பணி வழங்கியதாகக் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து மையிட்டான்பட்டி பஞ்சாயத்து அலுவலகம் சென்ற நாகலட்சுமிக்கு பணித்தள பொறுப்பாளர் பணியினை வழங்க வார்டு கவுன்சிலர்களான வீரகுமார், பாலமுருகன் மற்றும் பஞ்சாயத்து செயலர் முத்து ஆகியோர் மறுத்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் நாகலட்சுமிக்கு பணி வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் இன்று திருமங்கலம் நோக்கி சென்ற நகரப் பேருந்தில் பயணித்த நாகலட்சுமி, திடீரென ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நாகலட்சுமியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின்போது நாகலட்சுமி கைப்பட எழுதி வந்திருந்த கடிதத்தில், ‘தனக்கு வேலை தராததுடன், தன்னை தரக்குறைவாக பேசிய வீரகுமார், பாலமுருகன் மற்றும் முத்து ஆகியோர்தான் தனது தற்கொலைக்குக் காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து நாகலட்சுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், “திருமங்கலம் அருகே பேருந்தில் இருந்து குதித்து பெண் தற்கொலை தொடர்பாக கூடுதல் ஆட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. நாகலட்சுமி கடந்த மூன்று ஆண்டுகளாக நூறு நாள் வேலை திட்டத்தின்கீழ் பணியாளராக பணியாற்றி வந்தார். தனக்குப் பணித்தள பொறுப்பாளர் பணி வழங்குமாறு நாகலட்சுமி கோரிக்கை விடுத்திருந்தார். பொறுப்பு வழங்குவது தொடர்பான தகுதி குறித்து ஆராயுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தேன். கவுன்சிலர்கள், ஊராட்சி செயலர் தவறு செய்திருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறி உள்ளார்.

இதற்கிடையில் நாகலட்சுமி ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக வீரகுமார், பாலமுருகன் மற்றும் முத்து ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐந்து குழந்தைகளோடு வறுமையில் வாடிய ஒரு பெண்ணுக்கு நேர்ந்த இந்த கோர சம்பவம் அப்பகுதியில் உள்ளவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com