
நாம் அனைவரும் தினமும் யூடியூப் வீடியோக்களை பார்க்கும் வழக்கம் வைத்து இருக்கிறோம். அதில் சிலர் அந்த வீடியோக்களை அப்படியே நம்பி விடுகின்றனர்.தற்போது சமையல் கூட யூடியூப் பார்த்து தன செய்து வருகின்றனர். ஆனால் அனைவருக்கும் சுவையுடன் வருகிறதா என்பது ஒரு கேள்விக்குறி தான்... ஏனென்றால் அதில் சிலர் ஏமாற்றவும் செய்கின்றனர்.
சமையல் மட்டும் இல்லாமல் தற்போது எந்த செயல் செய்தாலும் நாம் முதலில் தேடுவது யூடியூப்பில் தான். அப்படி ஒரு பெண்மணி யூடியூப்பில் வருமானம் ஈட்டுவது எப்படி என தேடி வந்துள்ளார்.
சென்னையை சேர்ந்தவர் அருண். இவர் மனைவி பெயர் வனஜா (38), இவர்கள் இருவரும் மகன்களுடன் சொந்த வீட்டில் வசித்து வருகிறார். மாற்றுத் திறனாளியான அருண், பெயிண்டிங் டிசைனர் ஆக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் வனஜா,தன் கணவருக்கு உதவியாக இருக்க வேண்டும் என நினைத்து ‘யூடியூப்’ பார்த்து பங்கு சந்தையில் முதலீடு செய்தார். அதில் இரட்டிப்பு மடங்கு பணம் வரும் என கூறப்பட்டுள்ளது. இதனால் அதிக பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என எண்ணிய வனஜா, தன் கணவருக்கு தெரியாமல் கடன் செயலி (லோன் ஆப்)மூலம் ரூ.2.5 லட்சம் கடன் பெற்று பங்குச் சந்தையில் முதலீடு செய்தார்.
ஆனால் அவருக்கு காத்திருந்தது ஏமாற்றமே... அவருக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை. முதலீடு செய்த பணத்தையும் திரும்ப எடுக்க முடியவில்லை. இதனால் வாங்கிய கடனை கொடுக்க முடியாமல் இருந்துள்ளார். மேலும் கடன் கொடுத்த தனியார் வங்கி ஊழியர்கள் நெருக்கடி கொடுத்ததாகவும் தெரிகிறது.
இதனால் மனம் உடைந்த வனஜா, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், வனஜா உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே தற்கொலை செய்த வனஜாவின் செல்போனை போலீசார் ஆய்வு செய்ததில், தற்கொலைக்கு முன்னதாக அவர், பதிவு செய்து வைத்திருந்த 3 ஆடியோக்கள் இருந்தது. அதில் ஒரு ஆடியோவில், “நான் தனியார் வங்கியில் ரூ.2.5 லட்சம் கடன் வாங்கியதால் கடனை கேட்டு நெருக்கடி கொடுத்தனர். இதனால் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. என்னை மன்னித்து விடுங்கள்” என்று கூறி தனது கணவருக்கு ‘வாட்ஸ்அப்’பில் அனுப்பிவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.