இந்த நவீன யுகத்தில் ஒவ்வொரு செயலிலும் கவனமாக நடந்து கொள்வது நம் அனைவரது கடமையாகும். இருப்பினும் சிலர் மோசமானவர்களின் வலையில் விழுந்து பணத்தை இழந்து விடுகின்றனர். இப்படித்தான் பெங்களூரைச் சேர்ந்த பெண், டிண்டரில் அறிமுகமான காதலனிடம், சுமார் 4.5 லட்சத்தை இழந்துள்ளார்.
இந்தியாவில் மிகவும் பிரபலமான டேட்டிங் செயலிகளில் டிண்டர் முக்கிய இடத்தை வகிக்கிறது. இதில் பெங்களூருவைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர், மும்பையைச் சேர்ந்த அத்விக் சோப்ரா என்ற நபருடன் பழகியுள்ளார். தான் லண்டனில் மருத்துவப் பயிற்சியாளராக இருப்பதாகக் கூறி அந்தப் பெண்ணுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் அத்விக் சோப்ரா.
காலம் செல்லச் செல்ல, இவர்களுடைய நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறியுள்ளது. இருவரும் நேரில் சந்திக்க மிகுந்த ஆவலாக இருந்துள்ளனர். எனவே லண்டனில் இருந்து துபாய் வழியாக பெங்களூருக்கு வரப்போகிறேன் என அத்விக் சோப்ரா கூறவே, இணையத்தில் மட்டுமே பழகிய ஒரு நபரை நேரில் காணப்போகிறோம் என்ற பரவசத்தில் அந்தப் பெண்ணும் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில்தான், கடந்த மே 17ஆம் தேதி அந்தப் பெண்ணின் செல்போன் எண்ணுக்கு புதிய எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்துள்ளது. மறுமுனையில் இருந்து பேசிய நபர் தன்னை ஓர் விமான நிலைய அதிகாரி என அறிமுகம் செய்து கொண்டதோடு மட்டுமல்லாமல், அத்விக் சோப்ரா டெல்லி விமான நிலையத்தில் அதிக பணத்துடன் வந்துள்ளதாகவும், அவரை அங்கிருந்து விடுவிக்க அபராத தொகையாக ரூபாய் 68,500 செலுத்த வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
அதன் பிறகு சில மணி நேரங்கள் கழித்து மீண்டும் அந்த பெண்ணைத் தொடர்புகொண்டு, மேலும் அபராதமாக 1.8 லட்சமும், செயலாகக் கட்டணம் என்ற பெயரில் 2.06 லட்சமும் கட்ட வேண்டுமென மாற்றி சொல்லி இருக்கிறார். அந்தப் பெண்ணும் அத்விக் சோப்ரா மீதிருந்த அதீத நம்பிக்கையால், அந்த அதிகாரி கேட்ட தொகையை, அவர் அளித்த வங்கிக் கணக்கிற்கு உடனடியாக அனுப்பியிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து மீண்டும் அந்த போலி அதிகாரி ஜிஎஸ்டி கட்டணம் என்ற பெயரில் 6 லட்சம் ரூபாய் கட்ட சொல்லிய பிறகு தான், அந்த பெண்ணுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. பின்னர் அந்த அதிகாரியிடம் துருவித் துருவி கேள்வி கேட்டுள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் அவரால் பதில் அளிக்க முடியாததால், உடனடியாக அழைப்பைத் துண்டித்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். அப்போதுதான் அந்த பெண்ணுக்கு போனில் பேசிய நபர் போலி அதிகாரி என்பது தெரியவந்தது.
மேலும் இதனால் அத்விக் சோப்ரா மீதும் அப்பெண்ணுக்கு சந்தேகம் எழுந்ததால், உடனடியாக டிண்டரில் அவருடைய ஐடிக்கு சென்று பார்த்தபோது, அந்த அக்கவுண்ட் முற்றிலுமாக நீக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் ஆத்விக் சோப்ராதான் தன்னை ஏமாற்றியிருக்கிறார் என்பதை அந்த பெண் உணர்ந்து கொண்டார்.
இதைத் தொடர்ந்து டிண்டரில் 4.5 லட்சத்தை இழந்ததால், உடனடியாக அந்த பெண் சைபர் கிரைமில் புகார் கொடுத்த நிலையில், போலீசார் குற்றவாளியான ஆத்விக் சோப்ராவைத் தேடி வருகின்றனர்.