கலெக்டர் அலுவலகத்தில் பெண் தற்கொலை முயற்சி!

கலெக்டர் அலுவலகத்தில் பெண் தற்கொலை முயற்சி!

திருப்பூர் மாவட்டம், நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி சென்டிலா. லட்சுமணன் - சென்டிலா தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை என மொத்தம் நான்கு குழந்தைகள் உள்ளனர்.

இன்று காலை தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார் சென்டிலா. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக சென்டிலா தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் தனது கையை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தார்.

அம்மா கையை அறுத்துக்கொண்டதையும், அவரது கையில் இருந்து ரத்தம் கொட்டுவதையும் பார்த்த அவரது குழந்தைகள் பயத்தில் அலறினர். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த பணியாளர்கள் ஓடி வந்து அவருக்கு முதலுதவி செய்துவிட்டு கலெக்டர் அலுவலகப் பாதுகாப்புக்காக இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

காவல் துறையினர் அந்தப் பெண்ணை மேற்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்குக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அந்தப் பெண்ணிடம் விசாரித்தபோது, ‘தனது கணவன் மீது போலீசார் பொய் வழக்குப் போட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து இருக்கிறார்கள். தனது கணவன் இல்லையென்றால் தானும் தனது கணவனும் நடுத்தெருவில்தான் நிற்க வேண்டும். எனவே, போலீசாரின் இந்த நடவடிக்கையை தடுக்க வேண்டும் என கலெக்டரைப் பார்த்து மனு கொடுக்க வந்தேன். இந்த நிலையில்தான் இப்படி செய்துகொள்ள வேண்டியதாகி விட்டது’ என்று கூறினார்.

முன்னதாக, லட்சுமணன் டாஸ்மாக் ஊழியர்களிடம் பிரச்னை செய்ததைத் தொடர்ந்து, இவர் மீது தற்கொலை முயற்சி வழக்கு ஒன்றை போலீசார் பதிவு செய்து இருப்பதாகவும், மேலும், இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனாலேயே லட்சுமணன் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது.

நாள் முழுவதும் பரபரப்பாகக் காணப்படும் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஒருவர் திடீரென பிளேடால் கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com