ஒரு புறாவால் பெண்ணுக்கு ஏற்பட்ட பிரச்சனை.

ஒரு புறாவால் பெண்ணுக்கு ஏற்பட்ட பிரச்சனை.

ல சமயங்களில் நாம் பிறருக்கு நல்லது செய்யத்தான் நினைக்கிறோம். ஆனால் சில நேரங்களில் அதுவே நமக்குப் பிரச்சனையாக மாறிவிடுகிறது. இத்தகைய பிரச்சனையானது பலரை நல்லது செய்ய யோசிக்க வைத்து விடுகிறது. இப்படிப்பட்ட ஒரு சம்பவம்தான், மும்பையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு நடந்துள்ளது. 

பொதுவாகவே பறவைகள் என்றால் பலருக்கும் பிடிக்கும். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு சொல்லவே வேண்டாம். பறவைகள், விலங்குகள் என அனைத்தின் மீதும் கரிசனம் காட்டுவார்கள். ஏதாவது ஒரு பறவைக்கு காயம்பட்டு இருப்பதை இவர்கள் கண்டால், உடனடியாக அதை எடுத்து வந்து காயத்திற்கு மருந்து போட்டு, சரி செய்து மீண்டும் விட்டு விடுவார்கள். இப்படியான சம்பவங்கள் பலதை நாம் பார்த்திருப்போம். ஆனால் இதுபோன்ற நல்ல உள்ளம் கொண்டவர்களுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது என்பதை மும்பையில் நடந்த ஒரு சம்பவத்தின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். 

மும்பையில் உள்ள பிரபலமான ஸ்டுடியோவில் 'த்வானி மேத்தா' என்ற பெண் பணியாற்றி வருகிறார். அதே பகுதியில் வசித்து வரும் இவர், வழக்கம் போல் பணிக்குச் சென்று வீட்டுக்குத் திரும்பும்போது, சாலையோரமாக புறா ஒன்று அடிபட்டுக்கிடப்பதைக் கண்டுள்ளார். அந்த புறாவை வீட்டுக்கு கொண்டுசென்று உணவளித்து கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் பணிக்கு செல்வதால் அந்த புறாவை கவனித்துக்கொள்ள போதிய நேரம் கிடைக்கவில்லை. எனவே பறவைகள் மீட்பு அமைப்பிடம் புறாவை ஒப்படைத்து விடலாம் என முடிவு செய்தார். 

தனக்கு எந்த பறவைகள் மீட்பு அமைப்பும் தெரியாது என்பதால், google லில் அதைப் பற்றி தேடியபோது, சில மொபைல் எண்கள் இவருக்குக் கிடைத்தன. அந்த எண்ணைத் தொடர்பு கொண்டு பேசியபோது, எதிரே பேசிய நபர், சில ஆவணங்களை இவருக்கு இமெயில் மூலம் அனுப்பி, அதைப் பூர்த்தி செய்யச் சொல்லியுள்ளார். மேலும் புகார்க் கட்டணமாக ஒரு ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். பறவையைக் காப்பாற்ற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில், ஆவணங்களைப் பூர்த்தி செய்து அந்த நபர் கேட்டவாறு ஒரு ரூபாயையும் அனுப்பி இருக்கிறார் த்வானி மேத்தா. 

அதன் பிறகு, அடுத்த நாள் நாங்களே நேரில் வந்து புறாவைப் பெற்றுக் கொள்கிறோம் என்று அந்த நபர் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த நபர் சொல்லியது போல அடுத்த நாள் யாரும் வரவில்லை. இவரும் வருவார்கள் என்ற நம்பிக்கையில் அலுவலகம் சென்று விட்டார். இரு தினங்கள் கழித்து த்வானி மேத்தா ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் 99,988 பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக வங்கியைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர்களும் சில தகவல்களை அளித்துள்ளனர். அப்போதுதான், பறவைகள் மீட்பு அமைப்பின் ஆவணங்களைப் பூர்த்தி செய்யும்போது, தனது வங்கி விவரங்களையும் கொடுத்தது ஞாபகம் வந்தது. 

இதையடுத்து உடனடியாக மும்பை சைபர் கிரைம் போலீசாரிடம் த்வானி மேத்தா புகார் அளித்த நிலையில், இது குறித்து அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com