நீதிமன்றத்தில் சுடிதார் அணிய அனுமதி வேண்டி பெண் நீதிபதிகள் கோரிக்கை.

நீதிமன்றத்தில் சுடிதார் அணிய அனுமதி வேண்டி பெண் நீதிபதிகள் கோரிக்கை.
Published on

டை என்பது அணியும் எவருக்கும் வசதியாக இருக்க வேண்டுமே தவிர, அசவுகர்யமாக இருப்பது அவர்களின் அன்றாடப் பணிகளைப் பாதிக்கும். அதிலும் தற்போது எல்லாத் துறைகளிலும் வெற்றிக் கொடிநாட்டும் பெண்கள் தங்களின்  உடை விசயத்தில் விழிப்புணர்வு பெற்று வருவது வரவேற்கத்தக்கது. அன்று ஆறு முழம் சேலையில் வீட்டை மட்டும் வலம் வந்து முடங்கியப் பெண்கள் இன்று அவரவருக்கு வசதியான நாகரீக உடைகளில் சுதந்திரமாக படிக்கும் இடங்களிலும்,  பணியிடங்களிலும்  வலம் வருவதைக் காண முடிகிறது. காலம் மாறி விட்டாலும் அரசுத்துறை அலுவலகங்களில் இன்னும் உடைக் கட்டுப்பாடு இருப்பதைக் காணலாம். அதிலும் வழக்கறிஞர்கள் உடையின் சிறப்பை அனைவரும் அறிவோம்.

53 ஆண்டுகால ஆடை விதியில் மாற்றம் செய்து நீதிமன்றப் பணியின் போது சுடிதார் அணிய அனுமதிக்க வேண்டும் என கேரள நீதிமன்றத்தின்  பெண் நீதிபதிகள் கோரியுள்ளனர். தற்போது பெண் நீதிபதிகள் நீதிமன்றத்தில்  புடவை அணிந்து அதன் மேல் கருப்பு அங்கி (கவுன்) மற்றும் வெள்ளை நிறக் கழுத்துப் பட்டை அணிந்து வருகின்றனர்.

ஆனால் இந்த ஆடை முறை வசதியாக இல்லை எனவும், அதிலும் குறிப்பாக தற்போதைய கோடை காலத்தில் நெரிசல் நிறைந்த நீதிமன்றத்தில்  இவ்வாறு இறுக்கமாக ஆடை அணிந்து பல மணி நேரம் அமர்ந்திருப்பது மிகவும் சிரமமாக இருப்பதாகவும், அதிலும் பல சமயங்களில் மின்தடை ஏற்படும் போது வியர்வையில் நீர் வழிவதை சகிக்க வேண்டியுள்ளது எனவும்  பல பெண் நீதிபதிகளின் ஆதங்கம்.

இந்நிலையில் கேரள நீதிமன்றத்தின் பெண் நீதிபதிகள் சுமார் 100 பேர் கேரள ஐகோர்ட்டு பதிவாளரை நாடி உள்ளனர். அவரிடம் பெண் நீதிபதிகளுக்கான 53 ஆண்டுகால ஆடை விதியில் மாற்றம் செய்ய வேண்டும் பணியின்போது சுடிதார் அணிய அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

தெலங்கானா ஐகோர்ட்டு கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையையும் அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். அந்த சுற்றறிக்கையில் பெண் நீதிபதிகள் பணியின்போது வழக்கமான புடவையுடன், சல்வார், சுடிதார், நீளமான பாவாடை பேண்ட் அணியலாம் அவை வெள்ளை, வெளீர் மஞ்சள், சாம்பல், கருப்பு வண்ணத்திலோ அல்லது அவற்றின் கலவையிலோ  இருக்கலாம் என தெரிவித்திருந்தது. கடந்த 1970 ஆம் ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த நீதிபதி களுக்கான ஆடை விதியின்படி பெண் நீதிபதிகள் மிதமான வண்ணத்தில் ஆன புடவை போன்ற பிராந்திய ஆடை மேலங்கியுடன் வெண்ணிறத்திலான கழுத்தப்பட்டை அணிய வேண்டும். அதேபோல் ஆண் நீதிபதிகள் கருப்பு நிற திறந்த காலர் கோட்டு வெண்ணிற சட்டை வெள்ளை நிறத்திலான கழுத்துப்பட்டையுடன் மேலங்கி அணியலாம் என்ற விதிமுறை இருந்து வருகிறது.

ஆனால் தற்சமயம் நியாயமான கேரள பெண் நீதிபதிகளின் முறையீட்டை கேரள ஐகோர்ட்டின் கவனத்துக்கு  சென்று உள்ளதாக தெரிகிறது. அதன் பின்னான நடவடிக்கையில்தான்  இந்த 53 ஆண்டுகால ஆடை விதியில் மாற்றம் வருகிறதா என்பது தெரியவரும்.

உண்மையில் மக்கள் கூட்டம் அதிகம் புழங்கும் நீதிமன்றம் போன்ற துறைகளில் இயங்கும் பணியாளர்கள் தங்களுக்கு வசதியான உடையை வேண்டுவது நியாயமே. இனி நீதிமன்றத்தில் சுடிதார் அணிய பெண் நீதிபதிகளுக்கு அனுமதி கிடைகிறதா என்பதை நாமும் பொறுத்திருந்து பார்ப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com