புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் முதல் மசோதாவாக, மகளிர் இடஒதுக்கீடு மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதா மீது மக்களவையில் இன்று விவாதம் தொடங்கியது.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மக்களவையில் உறுதிபட தெரிவித்தார்.அப்போது பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, "சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் ‘நாரி சக்தி வந்தன்’ (பெண் சக்திக்கு வணக்கம்) மசோதாவை காங்கிரஸ் ஆதரிக்கிறது. எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் இது ஒரு உணர்வுப்பூர்வமான தருணம்.
பெண்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு கொண்டுவர முதல்முறையாக முயன்றவர் எனது கணவர் ராஜிவ் காந்தி. ஆனால், அந்த மசோதா மாநிலங்களவையில் 7 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது. அதன் பிறகு பி.வி. நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், இன்று நாட்டில் 15 லட்சம் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் தலைவர்கள் உருவாகி இருக்கிறார்கள்.
இதன் மூலம் ராஜீவ் காந்தியின் கனவு ஓரளவு நனவானது. சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் இந்த சட்டம் நிறைவேறினால்தான் அவரது கனவு முழுமையாக நனவாகும். இந்த மசோதா நிறைவேறுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். அதேநேரத்தில், காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஆட்சிக்காலத்தில் இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. அவ்வாறு நிறைவேற்றப்பட்டு 13 ஆண்டுகளாக இந்திய பெண்கள் காத்திருக்கிறார்கள்.
இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குக் காத்திருப்பது? இந்திய பெண்களை இவ்வாறு காத்திருக்க வைப்பது சரியா? இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும். அதேநேரத்தில், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதன் அடிப்படையில் SC, ST மற்றும் OBC சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்" என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய திமுக எம்பி கனிமொழி, "இந்த மசோதாவை நாங்கள் ஏற்கிறோம்; ஆதரிக்கிறோம். ஆனால், துரதிருஷ்டவசமாக பாஜக இதனை அரசியலாக்குகிறது.
பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் முதல்முறையாக 1996-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. திமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி செய்த பிரதமர் தேவகவுடா தலைமையிலான அரசு இந்த மசோதாவை அப்போது கொண்டு வந்தது. அந்த மசோதாவை அப்போது திமுக ஆதரித்தது. அதன் பிறகு, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இந்த மசோதா மீண்டும் கொண்டுவரப்பட்டது. ஆனால், அப்போதெல்லாம் மசோதா நிறைவேறவில்லை.
முதல்முறையாக இந்த மசோதா மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. அப்போது, இந்த மசோதாவை ஆதரித்து நான் பேசினேன். ஆனால், மசோதா மக்களவையில் நிறைவேறவில்லை. 13 ஆண்டுகள் கழித்து தற்போதும் நான் இந்த மசோதாவை ஆதரித்துப் பேசுகிறேன். 13 ஆண்டுகளாக நாம் இது குறித்து பேசிக்கொண்டேதான் இருக்கிறோம். ஆனால், சட்டமாக கொண்டுவரப்படவில்லை.
இந்த மசோதா பெண்களுக்குக் கொடுக்கப்படும் சலுகை அல்ல. இது சலுகை என சொல்வதை நிறுத்திக்கொள்ளுங்கள். இது பெண்களுக்கான உரிமை. ஆண்களுக்கு சமமாக பெண்கள் நடத்தப்படுவதையே நாங்கள் எதிர்பார்க்கிறோம் என தெரிவித்தார்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து தொடர்ந்து பேசிய எம்பி கனிமொழி, நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் பெண்களுக்கு அரசு அமைப்புகளில் சம அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆனால் எங்கள் தமிழ்நாட்டில் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே நாட்டிலேயே முதல் பெண் மேயராக முத்து லட்சுமியை தேர்ந்தெடுத்தோம். அதேபோல் பெண்களுக்கு சமயுரிமை வழங்ககோரி பெரியார் தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பெண்களுக்கு அரசியலில் சம அங்கீகாரம் வழங்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து நீதிகட்சி ஆட்சியில் பெண்கள் தேர்தலில் போட்டியிட நாட்டிலேயே முதல் முறையாக அங்கீகாரம் அளித்தது தமிழ்நாடுதான் என்றார்.
முன்னதாக திமுக எம்பி கனிமொழி மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து பேசத் தொடங்குவதற்கு முன்பு பாஜக உறுப்பினர்கள் இந்தியில் கூச்சலிடத் தொடங்கினார்கள். அப்போது பேசிய கனிமொழி,’’நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்றே புரியவில்லை, நீங்கள் என்ன பேசினாலும் புரியாது" என்றார். அவர் பேசும் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.