தாய்லாந்தில் பெண் ஒருவரின் கால் எஸ்கலேட்டரில் சிக்கி துண்டான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாகவே மனிதர்கள் நடப்பது என்பதே குறைந்து விட்டது. அனைத்திற்கும் இயந்திரம் என்பது போல படிக்கட்டுகள் ஏறி இறங்கும் வேலையை சுலபமாக்க லிப்ட், எஸ்கலேட்டர்கள் கொண்டு வரப்பட்டது. நாளுக்கு நாள் இயந்திர கோளாறு காரணமாகவோ, மக்களின் கவனக்குறைவு காரணமாகவோ லிப்ட்டில் சிக்குவது, எஸ்கலேட்டரில் மாட்டி கொள்வது என பல சம்பவங்கள் அரங்கேறிதான் வருகிறது. சமீபத்தில் கூட சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் லிப்ட்டில் சிக்கி உடல் துண்டான இளைஞரின் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தற்போது தாய்லாந்திலும் அப்படி ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
சர்வதேச அளவில் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தாய்லாந்தில் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். அப்படி வந்த சுற்றுலா பயணி ஒருவர் பாங்காக்கில் உள்ளா டான் முயாங் சர்வதே விமான நிலையத்தில் உள்ள எஸ்கலேட்டரில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக எஸ்கலேட்டருக்குள் காலை விட்டு சிக்கி கொண்டார். இதனால் வலி தாங்காமல் கதறி துடித்துள்ளார். உடனடியாக விமான நிலைய அதிகாரிகள், எஸ்கலேட்டரை நிறுத்தி பெண்ணின் காலை எடுக்க முயற்சித்துள்ளனர். ஆனால் எதிர்பாராத விதமாக கால் துண்டாகியுள்ளது. இதனை கண்ட அந்த பெண் கதறி துடிக்கவே, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அவருக்கு தேவையான மருத்துவ செலவு, இழப்பீடு தொகையை விமான நிலைய நிர்வாகம் ஏற்றுகொள்வதாக தெரிவித்துள்ளது.
இதையடுத்து, விமான நிலையத்தில், எஸ்கலேட்டர் தற்காலிகமாக மூடப்பட்டது. அலட்சியத்தால் இந்த விபத்து ஏற்பட்டிருந்தால், உரியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.