மகளிர் உரிமைத்தொகை ரெடி - பெண்களுக்கான புதிய சிக்கல்களுக்கு தீர்வு உண்டா?

மகளிர் உரிமைத்தொகை ரெடி - பெண்களுக்கான புதிய சிக்கல்களுக்கு தீர்வு உண்டா?

தமிழ்நாடு அரசின் சமூக பாதுகாப்பு திட்டங்களின் மூலம் பலனடைந்து வரும் பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை பெற தகுதி இல்லை என்னும் தமிழக அரசின் அறிவிப்பு பேசுபொருளாகியிருக்கிறது.

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் மகப்பேறுகாலத்தில் 24 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. ஒருவேளை சம்பந்தப்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு அதே காலகட்டத்தில் மாதம் தோறும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுமா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

முதியோர் ஓய்வூதியம், விதவைகளுக்கான ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு தகுதி இல்லை என்பது சரியானது. ஆனால், ஈ.வே.ரா மணியம்மையார் நினைவு ஏழை கைம்பெண்களின் மகள் திருமண உதவித் திட்டமாக 30 ஆயிரம் தரப்படுகிறது. ஏழை கைம்பெண்களுக்கு உரிமைத்தொகை இல்லை. ஆனால், திருமண உதவித் திட்டமாக 30 ஆயிரத்தை பெற்றுக்கொண்ட அவரது மகளுக்கு உரிமைத்தொகை உண்டா, இல்லையா என்கிற கேள்வி எழுகிறது.

அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற மகளிர் திருமண நிதி உதவித்திட்ம், மூவலூர் ராமமிர்தம் அம்மமையார் நினைவு திருமண உதவித் திட்டம், அஞ்சுகம் அம்மா நினைவு உதவித்திட்டம் அனைத்தும் திருமண உதவித்திட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பெண்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் திருமண உதவியாக கிடைக்கிறது.

திருமண உதவித் திட்டத்தினால் சமூகத்தின் பலதரப்பட்ட பெண்கள் பலனடைந்து வருகிறார்கள். ஒருவேளை திருமண உதவித்திட்டத்தின் மூலம் கிடைக்கும் திருமண உதவி பெற்றிருப்பதால் மகளிர் உரிமைத்தொகை கிடைக்குமா என்கிற கேள்வி எழுகிறது.

தி.மு.க தன்னுடைய தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல் பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதிகள் ஏற்படுத்தப்படும் என்கிற கோரிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. தமிழகத்தில் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணம் செய்யக்கூடிய பெண்கள் யாராவது துணையோடுதான் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. ஓரிடத்தில் போய் தங்க வேண்டுமென்றால் யாருடைய உதவியாவது தேவைப்படுகிறது.

பெண்களுக்கு எதிரான இணையவழி குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இணைய வழி மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட இருப்பதாக தி.மு.க தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஆனால், இரண்டாண்டுகளில் சைபர் கிரைம் அமைப்பையே பலப்படுததமுடியவில்லை. சமீப காலங்களில்தான் புதிய தொழில்நுட்ப கருவிகளெல்லாம் வாங்கி, பயிற்சியெடுத்து வருகிறார்கள்.

இலவச மகளிர் பேருந்துகளின் மூலமாக ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணம் செய்ய முடியும். ஆனால், தங்க வேண்டுமென்றாலோ அல்லது பொது கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தாலோ பெண்களுக்கு ஏற்படும் அசௌகரிய நிலை தொடர்ந்து கொண்டுதான் இருககிறது.

பெண்களுக்கான புதிய சிக்கல்கள் உருவாகியிருக்கின்றன. நாம் தொடர்ந்து பழைய பிரச்னைகளுக்கு தீர்வு தந்து கொண்டிருக்கிறோம். திருமண உதவிக்காக ஏகப்பட்ட திட்டங்களை தமிழகத்தில்தான் பார்க்க முடிகிறது. உண்மையின் பெண்களுக்கான பழைய பிரச்னைகள் ஏற்கனவே தீர்க்கப்பட்டுவிட்டன அல்லது அதன் தீவிரத்தன்மை மட்டுப்படுததப்பட்டுவிட்டன். இந்நிலையில் புதியதாக உருவெடுத்த சிக்கல்களுக்குத்தான் தீர்வு காண வேண்டியிருக்கிறது

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com