மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாய் யாருக்குக் கிடைக்கும்?

மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாய் யாருக்குக் கிடைக்கும்?

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று குடும்பத் தலைவிகளுக்கு வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல், ‘மகளிர் உரிமைத் தொகை’ 1000 ரூபாய் வழங்கும் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகளுடன் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பிறகு, ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ என்று பெயரிடப்பட்டு இருக்கும் திட்டத்தின்படி, மகளிர் உரிமைத் தொகையை பெற தகுதியான குடும்பத்தலைவிகள் யார் யார் என்பது குறித்தத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதன்படி, பெண் அரசு ஊழியர்கள், ஏற்கெனவே முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதி இல்லை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களைத் தவிர) அதாவது, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஊராட்சிமன்றத் தலைவர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இந்த உரிமைத் தொகையைப் பெற முடியாது. குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2.5 லட்ச ரூபாய்க்கு மேல் இருப்பவர்களுக்கு மற்றும் வீட்டில் நான்கு சக்கர வாகனம் சொந்தமாக வைத்திருப்பவர்களின் குடும்பத் தலைவிகள், மகளிர் உரிமைத் தொகையான ஆயிரம் ரூபாய் பெற முடியாது. அதைப் போலவே, ஐந்து ஏக்கர் நிலம் சொந்தமாக வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படாது.

அதைப்போலவே, குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே இந்த மகளிர் உரிமைத் தொகையை பெற முடியும். மகளிர் உரிமைத் தொகை பெற அந்தக் குடும்பத் தலைவிக்கு 21 வயது நிரம்பி இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு என்று ஏதுமில்லை. சிறு சிறு நிறுவனங்களில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் மகளிர் மற்றும் ஒரு நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளில் வேலை செய்யும் மகளிர் இந்த உரிமைத் தொகையை பெற தகுதியானவர்கள் ஆவர். அரசின் இந்த மகளிர் உரிமைத் தொகையை பெற, எந்த ரேஷன் கடையில் குடும்ப அட்டை உள்ளதோ, அந்த ரேஷன் கடையில் இதற்காக விண்ணப்பிக்க வேண்டும். மகளிர் உரிமைத் தொகையைப் பெற, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் இந்த மகளிர் உரிமைத் தொகையான 1,000 ரூபாய் செலுத்தப்பட உள்ளது. சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. தமிழக நிதிநிலை அறிக்கையில் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்துக்கு முதல்கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com