3600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரத்தை பயன்படுத்தினால் மட்டுமே மகளிர் உரிமைத்தொகை - சாத்தியமாக்கிய ஆதார் கார்டு இணைப்பு!

3600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரத்தை பயன்படுத்தினால் மட்டுமே மகளிர் உரிமைத்தொகை - சாத்தியமாக்கிய ஆதார் கார்டு இணைப்பு!

3600 யூனிட்டிற்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள் மட்டும் மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பிக்க முடியும் என்று தமிழக அரசு ஷாக் கொடுத்திருக்கிறது. மின்சார பயன்பாட்டை பொறுத்து அரசின் சமூக நல திட்டங்கள் செயல்பாட்டுக்கு வருவது இதுவே முதல் முறை என்பதால் அனைத்து தரப்பினரையும் அறிவிப்பு ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது.

மகளிருக்கான உரிமைத்தொகை திட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்னும் பெயரில் செப்டம்பர் 15 முதல் அமலுக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. திட்டத்திற்கு பங்குபெற நினைக்கும் பெண்கள், சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் விண்ணப்பிக்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

யார் யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும் என்பது குறித்து விரிவான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் குடும்பம், குடும்பத் தலைவி என்பதை வரையறை செய்வதிலும், சமூக நலன் திட்டங்களின் மூலமாக ஏற்கனவே பயனடைந்து வருபவர்களுக்கு உரிமைத்தொகை தரப்படுமா என்கிற கேள்விகள் எழுந்திருக்கின்றன. இந்நிலையில் குடும்பத்தின் மின்சார பயன்பாடும் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான தகுதியை நிர்ணயம் செய்கிறது.

ஆண்டுக்கு 3600 யூனிட்டுக்கும் குறைவான மின்சாரத்தை பயன்படுத்தும் குடும்பங்கள் மட்டுமே இதில் பங்கேற்க முடியும். ஆண்டுக்கு 3600 யூனிட் என்றால் மாதந்தோறும் 300 யூனிட்டுக்கு குறைவான மின்சாரத்தை பயன்படுத்துபவர்கள் மட்டுமே இதில் தகுதி பெற முடியும். தமிழகத்தை பொறுத்தவரை சராசரி மின்சார பயன்பாடு என்பது மாதம் 200 யூனிட் என்பதை எப்போதோ தாண்டிவிட்டது.

தமிழக வீடுகளில் மிக்ஸி, பிரிட்ஜ், ஏ.சி போன்றவை தவிர்க்க முடியாத பொருட்களாகிவிட்டன. இது போன்ற அத்தியாவசியப் பொருட்களை பயன்படுத்தும் லோயர் மிடில் கிளாஸ் குடும்பங்களில் கூட மாதந்தோறும் மின்சார பயன்பாடு என்பது 500 யூனிட்டை தாண்டிவிட்டது. ஆகவே, 300 யூனிட்டுக்கும் குறைவான மின்சாரத்தை பயன்படுத்துபவர்கள் மிகக்குறைவான எண்ணிக்கையில் மட்டுமே இருக்க முடியும்.

சமீபத்தில் ஆதார் கார்டை மின்கட்டணத்தோடு இணைத்தே ஆகவேண்டும என்று தமிழ்நாடு மின்சார வாரியம் கட்டாயப்படுத்தியது. மகளிர் உரிமைத்தொகையில் பலனடையும் பெண்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காகவே இத்தகைய நடவடிக்கை என்று அப்போதே பேசப்பட்டது. தற்போது அதை உண்மையாக்கும் வகையில் 3600 யூனிட் என்கிற நிபந்தனையை முன்வைத்திருக்கிறார்கள்.

எப்படி பார்த்தாலும், ஒரு கோடிக்கும் குறைவான பெண்கள் மட்டுமே மகளிர் உரிமைத்தொகைக்கு தகுதி பெறுபவர்களாக இருக்க முடியும். ஒரு கோடி பெண்களாக இருந்தாலும் கூட மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை என்பது அரசுக்கு பெரும் செலவு வைக்ககூடியது என்கிறார்கள், பொருளாதார வல்லுநர்கள். தமிழக அரசு எப்படி சமாளிக்கப்போகிறது?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com