தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை என மாதம் 1000 ரூபாய் தமிழக அரசு மகளிருக்கு வழங்கி வரும் நிலையில், தற்போது பஞ்சாபிலும் இந்த திட்டம் கொண்டுவர உள்ளதாக பஞ்சாப் முதல்வர் பேசியிருக்கிறார்.
தமிழக அரசு 2023 செப்டம்பர் மாதம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறது. அரசு அறிவித்த சில தகுதிகள் இருக்கும் பெண்களுக்கு மட்டுமே உரிமைத் தொகை பெறுவதற்கு தகுதி உண்டு. அந்தவகையில் முதல் கட்டமாக 1 கோடி பெண்களை இலக்காக கொண்டு இந்தத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டது. ஆனால், அதைவிட அதிகமானோர் பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்ததால், தகுதி வாய்ந்த அத்தனை மகளிருக்கும் பணம் வழங்கப்பட்டது.
முதல் கட்டமாக ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்த நிலையில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு தொடர்ந்து பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வந்தது. சுமார் ஒரு கோடியே 15 லட்சம் பயனாளர்கள் இணைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் ஒரு லட்சத்து 48 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டனர்.
இதனால் பெண்கள் மிகவும் பயனடைந்தனர். இதனையடுத்து தற்போது பஞ்சாபிலும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் வரும் நவம்பர் மாதம் 13ம் தேதி சப்வேவால் சட்டசபை தொகுதியின் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளன.
இதனையடுத்து ஆம் ஆத்மி வேட்பாளருக்கு ஆதரவாக முதல் மந்திரி பகவந்த் மான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பிரச்சார கூட்டத்தில் கூறியதாவது, "இந்த பிரச்சார கூட்டத்தில் பெண்கள் அதிகமானோர் கலந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
எங்களது பிரச்சார கூட்டத்தில் மட்டுமே பெண்கள் அதிகம் பங்கேற்கின்றனர். இதற்குக் காரணம் ஆம் ஆத்மி அரசு பெண்களின் தேவைகளை தெரிந்து கவனித்துக் கொள்கிறது. எங்களது அடுத்த திட்டம் ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு ரூபாய் 1,100 வழங்குவதே ஆகும். “ என்று பேசினார்.
கடந்த 2022ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெண்களுக்கு மாதம்தோறும் ரூபாய் 1000 வழங்கும் திட்டத்தை வாக்குறுதியாக கொடுத்தது.
2022 தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று முதல் மந்திரி ஆக பகவந்த் மான் பொறுப்பேற்றும், பெண்களுக்கு மாதம் தோறும் 1000 வழங்கும் திட்டத்தை இன்று வரை தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.