சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெறும் மகளிர் சுய உதவிக்குழுக்களின் விற்பனைக் கண்காட்சி, இன்னும் பத்து நாட்களுக்குத் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரித்த பொருட்களின் புத்தாண்டு - பொங்கல் விற்பனைக் கண்காட்சி சென்ற வாரம் தொடங்கியது.
இக்கண்காட்சியில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரித்த பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. வீட்டு உபயோகப் பொருட்கள், இயற்கை மூலிகைகள், செயற்கை ஆபரணங்கள், சுடுமண் சிற்பங்கள், கால் மிதியடிகள், பட்டு மற்றும் பருத்திப் புடவைகள், கண்ணாடி ஓவியங்கள், பரிசுப் பொருட்கள், ஆயத்த ஆடைகள், மரச் சிற்பங்கள், இயற்கை உரங்கள், கைவினைப் பொருட்கள், பனை ஓலைப் பொருட்கள் ஆகியவை விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ளன.
இது தவிர அன்றாட பயன்பாட்டிற்கான காபிப் பொடி, மிளகு, முந்திரிப் பருப்பு வகைகள், மசாலாப் பொருட்கள், நாட்டுச் சர்க்கரை, சத்து மாவு, சிறு தானியங்கள், பாரம்பரிய அரிசி வகைகள், தேன், கடலை மிட்டாய், மூலிகை பொடிகள் போன்றவையும் விற்பனை செய்யப்படுகின்றன. பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருக்கும் சுய உதவிக் குழுக்களின் உதவியோடு கண்காட்சி நடைபெற்று வருகிறது.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாத துணிப் பைகள், மஞ்சள் பைகள் விற்பனை செய்யும் அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஆகியவற்றின் கீழ் பணி செய்யும் சுய உதவிக் குழுக்கள், திருநங்கையர் சுய உதவிக் குழுக்களும் விற்பனையை கவனித்துக் கொள்கிறார்கள். நாள்தோறும் காலை 10.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சியில் பங்கேற்க அனுமதி இலவசம்.
தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், பெண்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காக தீட்டப்பட்ட பல்வேறு அரசுத் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கிறது. குறிப்பாக மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்புடன் தீன் தயாள் உபாத்யாய – கிராமின் கௌசல்யா யோஜனா உள்ளிட்ட திட்டங்களை ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் செயல்படுத்தி வருகிறது.
இதன் மூலம் 18 வயது முதல் 35 வயதிற்குட்பட்டவர்களுக்கு தொழில் பயற்சி அளிக்கிறது. தமிழகத்தில் குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் 27 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப் பட்டிருக்கின்றன. அதன் மூலம் தனியார் நிறுவனங்களில் 4876 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்பட்டுள்ளது. சக்தியெல்லாம் ஒன்று சேர்ந்தாலே....