
தமிழ்நாட்டில் தீம் பார்க்கிற்கான மவுசு அதிகரித்து வருகிறது. பெரியளவில் தீம் பார்க் இல்லையென்றாலும், மக்கள் வேறு ஊர்களுக்கு சென்று தீம் பார்க்கை அனுபவித்து வருகிறார்கள்.
இந்தியாவில் முன்னணி தீம் பார்க் நிறுவனமாக, வொண்டர்லா (Wonderla Amusement Park) தீம் பார்க் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் ஹைதராபாத், கொச்சி, பெங்களூர் மற்றும் புவனேஸ்வர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் வொண்டர்லா தீம் பார்க் செயல்படவில்லை என்றாலும், பெங்களூருக்கு தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான மக்கள் படையெடுக்கின்றனர்.
இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வொண்டர்லா தீம் பார்க் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அரசுடன் இணைந்து போடப்பட்டது. பல்வேறு நிர்வாக சிக்கல் காரணமாக தொடர்ந்து, வொண்டர்லா தீம் பார்க் அமைப்பதற்கான பணிகள் தாமதம் ஆகி வந்தன. இந்தநிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து அதற்கான நடவடிக்கையில் இறங்கின.
இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தனது 5-வது கிளையை தமிழ்நாட்டில் வொண்டர்லா நிறுவனம் தொடங்க உள்ளது. சென்னை புறநகர் பகுதியில் உள்ள பழைய மகாபலிபுரம் சாலையில், உள்ள செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த இள்ளளூர் என்ற பகுதியில் 510 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த பூங்கா அமைய உள்ளது. இந்த பொழுதுபோக்கு பூங்கா 62 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவில் உலகப் புகழ்பெற்ற Bolliger & Mabillard எனும் கோஸ்டர் அமைய உள்ளது. இதற்கான அனுமதி கொடுக்கப்பட்டு, அனைத்துவித பணிகளும் முடிவடைந்துள்ளன. இந்த ரோலர் கோஸ்டர் இந்தியாவில் மிகப்பெரிய ரோலர் கோஸ்டராக இருக்கப் போவது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே லண்டன் மற்றும் நியூயார்க் போன்ற நகரங்களில் இருப்பதை போன்று ரோலர் கோஸ்டர் சென்னையிலும் அமைய உள்ளது. இந்த ரோலர் கோஸ்டர் அமைப்பதற்கு, 80 கோடி ரூபாய் வரை செலவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், சென்னையில் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி தான் பலருக்கும் உள்ளது.
இது குறித்து ஒண்டர்லா நிர்வாக தலைவர் அருண் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை முன்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வர பணிகள் நடைபெற்ற வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், 2026 நிதியாண்டில் பார்வையாளர்களின் எண்ணிக்கை 5-10% வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கின்றனர். ஏப்ரல் முதல் மாலை நேர வருகைகளை ஊக்குவிக்கும் வகையில் இரவு 10 மணி வரை பூங்காக்களைத் திறந்து வைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.