உலகம் முழுவதும் மனிதனின் அடிப்படைத்தேவைகளில் முதலிடம் வகிப்பது உணவே ஆகும். இருக்க சொந்த இடமோ உடுத்தப்பட்டோ அல்லது ஆடம்பரமான ஆடைகளோ இல்லாவிடினும் ஒரு மனிதனால் உயிர் வாழ முடியும். ஆனால் பசிக்கு உணவு கிடைக்க வில்லை எனில் அவன் மிருகமாவே மாறி விடுவான் என்பதுதான் உண்மை. ஏனெனில் உணவு உண்டால் மட்டுமே நம்மால் உயிர் வாழமுடியும். உணவு நமது உடலுக்கு அன்றாடம் இயங்கத் தேவையான ஊட்டங்களை அளிக்கும் எரிபொருள் என்று சொல்லலாம். பெட்ரோல் எனும் எரிசக்தி முலம் ஓடும் வண்டி போல் சத்து மிக்க உணவுகளை உண்பதால் உடலுக்கு கிடைக்கும் ஆற்றலால் உயிர் சக்திக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கிறது. ஆனால் சமீப காலமாக நாம் உண்ணும் உணவு சத்துக்கள் நிறைந்த பாதுகாப்பான உணவாக உள்ளதா என்றால் அதற்கான பதில் இல்லை என்பதாகத் தான் வரும் .
அன்று உணவுக்காகவே உழைத்தார்கள். ஆனால் இன்று உழைப்பதும் சுருங்கி விட்டது. பசியும் குறைந்து உண்ணும் உணவும் குறைந்து விட்டது. காரணம் பாதுகாப்பற்ற உணவு வகைகள். அறிவியல் முன்னேற முன்னேற முதலில் பாதிக்கப்பட்டது உணவு வகைகள்தான் எனலாம். நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்காக உணவு வகைகளில் சேர்க்கப்படும் ரசாயனங்கள் நம் உடல் நிலையைப் பாதித்து பல்வேறு உடல் பாதிப்புகளுக்கு வழிவகுக்கிறது. இதை அனைவரும் அறிந்தாலும் மேனாட்டு சுவைக்கு அடிமையாகி தெரிந்தே பாஸ்ட்புட் உணவுகளை வாங்கி ருசிக்கிறோம். இதனால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து அறிந்தும் பலரும் இதன் சுவைக்காகவும் விலை குறைவாக கிடைப்பதாலும் இதனை தவிர்க்க மறுக்கின்றனர். இயற்கை உணவு பொருட்களால் செய்யப்படும் உணவுகளை பெரும்பாலோனோர் விரும்புவதில்லை. மற்றொரு காரணம் நேரமின்மை. இந்த அவசர உலகத்தில் சமையலுக்கு நேரம் ஒதுக்குவது என்பது கணவன் மனைவி இருவருக்கும் இயலாத ஒன்றாகிறது. வருமானம் கை நிறைய வருவதால் உணவுப்பொருட்களை விற்பனை செய்வோரிடம் இருந்து ஆர்டர் செய்து வாங்கி அது எப்படி இருந்தாலும் சமரசம் செய்து சாப்பிடுகிறார்கள்.
அந்தக் காலத்தில் உடல் நலம் கெட்டால் சமையல் அறையில் இருக்கும் மிளகு, ஜீரகம், பூண்டு போன்ற பொருள்களைக் கொண்டே மருத்துவம் தயாராகும். ஆனால் இன்றோ உணவு உண்ட பின் அதை ஜீரணிக்கவே மருத்துவரை நாடுகிறோம். அதாவது “உணவே மருந்து” என்ற நிலை மாறி தற்போது “மருந்தே உணவு” என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய பல காரணங்கள் இருந்தாலும் உணவு முறை மாற்றமே முக்கிய காரணமாக உள்ளது எனலாம். இந்த தரமற்ற உணவு பொருட்களால் 200 வகையான நோய்கள் உருவாகுவதாக கூறப்படுகிறது. இதனால் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இது தவிர வறுமை மற்றும் உள்நாட்டு போர் போன்ற காரணங்களாலும் உணவின்றி மக்கள் உயிரிழக்க நேரிடுகிறது.
நல்ல உணவு வகைகள் நாம் ஆரோக்கியமாக இருக்க உதவும். அதே சமயம் காலாவதியான அசுத்தமான அல்லது சரியாக சமைக்கப்படாத உணவுகளால் நலன் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படும். இந்த நிலை மாறி உலக மக்களுக்கு தரமான ஆரோக்கியமான உணவு கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் எனவும் சத்தான உணவு குறித்த விழிப்புணர்வை உலக நாடுகளுக்கு ஏற்படுத்தும் நோக்கிலும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் ஏழாம் தேதி உலக உணவு பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. உணவு பாதுகாப்பு என்பது நமது தலைமுறை மட்டுமின்றி அடுத்த தலைமுறைகளுக்கு பாதுகாப்பான உணவை வழங்குவதாகும். யோசிப்போமா?