ஒடிசா ரயில் விபத்துக்கு உலகத் தலைவர்கள் வருத்தம்!

ஒடிசா ரயில் விபத்துக்கு உலகத் தலைவர்கள் வருத்தம்!
Published on

லக நாடுகளையே உற்றுப் பார்த்து உறக்கமிழக்கச் செய்திருக்கும் மாபெரும் கோரச் சம்பவம் ஒடிசா ரயில் விபத்தாகும். இந்தக் கொடுமையான ரயில் விபத்து குறித்து உலகத்தின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் தங்களது ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது ட்விட்டர் பக்கத்தில், 'ரயில் விபத்து குறித்த படங்கள் மற்றும் செய்திகள் வேதனை அளிக்கிறது. தங்களது நேசத்திற்குரியவர்களை இழந்து வாடுபவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கடினமான நேரத்தில், கனட மக்கள் இந்திய மக்களுக்கு உடன் இருப்பார்கள்' என பதிவிட்டு இருக்கிறார்.

நேபாள பிரதமர் புஷ்பா கமல் தஹல் தனது ட்விட்டர் பக்கத்தில், 'ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகி இருப்பது வருத்தமளிக்கிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்திய அரசுக்கும் மற்றும் உறவினர்களை இழந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று பதிவு செய்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் கோரோசி தனது ட்விட்டர் பக்கத்தில், 'ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து பற்றிய செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய மக்களுக்கும் இந்திய அரசுக்கும் எனது வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

தைவான் அதிபர் சாய் இங்-வென் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இந்தியாவில் ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று பதிவு செய்திருக்கிறார்.

இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், 'பாலசோரில் நடந்த பயங்கர ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துயரமான நேரத்தில் இந்தியா மற்றும் ஒடிசா மக்களுடன் நாங்கள் இருக்கிறோம்' என்று பதிவிட்டுள்ளார்.

இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் தனது ட்விட்டர் பக்கத்தில், 'ஒடிசாவில் ரயில் தடம் புரண்டதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்' என்று பதிவு செய்துள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து இன்னும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் இந்த பயங்கர ரயில் விபத்து குறித்து தங்களது இரங்கல் செய்திகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com