

நேற்று சர்வதேச அளவில் உலகப் பெருங்கடல் தினம் அனுசரிக்கப்பட்டது.
அதையொட்டி ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவுகளில் பல்லுயிர் பெருக்க கண்காட்சி காணொலியாக வெளியிடப்பட்டுள்ளது. காணத் தெவிட்டாத பல்லுயிர் பெருக்கக் காட்சிகளை அள்ளி வழங்கிய இந்த கேனரியா தீவுகள் அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ளன.
இத்தீவுக்கூட்டத்தில் ஏழு முதன்மைத் தீவுகள் உள்ளன. அவை: லா பால்மா, லா கோம்ரா, எல் ஹீரோ, தெனெரீஃப், கிரான் கனரியா, லான்சரோட் மற்றும் ஃபுயுர்தெவென்டுரா. அட்லாண்டிக் பகுதியில் இந்த தீவுக்கூட்டங்கள் அனைத்துமே அதனுள் அடங்கியுள்ள கடல்வாழ் உயிரினங்களின் அபிரிமிதமான வளத்தால் எப்போதும் வண்ணமயமானதாகவே காட்சியளிக்கக் கூடியவை.
இங்குள்ள அரிநகா பகுதியில் பல்லாயிரக்கணக்கான கடல்வாழ் உயிரினங்கள் பல்கிப் பெருகி வாழ்ந்து வருகின்றன. அழிந்து வரும் அரிய வகை மீன்களெனக் கருதப்படும் மாண்ட்ஃபிஷ் வகையும் பெருமளவில் இங்கு காணக்கிடைக்கிறது. கிராண்ட் கேனரி அரசு கொடுத்துள்ள தகவல்களின் அடிப்படையில் மீன் வகைகளில் மட்டும் சுமார் 500 க்கும் அதிகமான இனங்கள் கேனரி தீவை வாழிடமாகக் கொண்டுள்ளன. இவை தவிர சுமார் 80 க்கும் அதிகமான கடல்வாழ் பாலூட்டி இனங்களும் இங்கு உண்டு என்கிற தகவல் உறுதியாகிறது.
வருடம் முழுவதுமே இந்தத் தீவுகள் இங்குள்ள இதமான வானிலை மற்றும் அழகான கடற்கரைகளுக்காக சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் புகழ்பெற்று விளங்குகின்றன.
பூமியில் நாம் வாழ்வதற்கு பெருங்கடல்கள் பெரும்பங்கு வகிக்கின்றன, அவை,கண்டங்களை ஒன்றிணைத்து ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு வியாபார நிமித்தம் சென்று வர வாய்ப்பளித்து பொருளீட்டலில் முக்கிய பங்கு வகிக்கின்றது. பலநாடுகளின் போக்குவரத்து கடல் மார்க்கமாகவே கையாளப்படுகிறது. கடல் ஒவ்வொரு ஆண்டும் பல மில்லியன் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்திசெய்வதோடு, உலக மக்கள் உயிர்வாழத் தேவையான அக்ஸிஜனையும் உற்பத்தி செய்கிறது. தவிர, கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் மூலமாக முக்கியமான மருந்துகளின் மூலப்பொருட்களையும் வழங்குகிறது. மேலும், காலநிலை மாற்றங்களைச் சீரமைக்க பேருதவியாக உள்ள இப்பெருங்கடல்கள், இப்படி ஒட்டுமொத்தமாக முழு உலகுக்கும் வாழ்வாதாரமாக விளங்கி வருவதால் கடல்களைப் பாதுகாக்கும் நோக்குடன் உலகப் பெருங்கடல் தினமானது 2008 ஆம் ஆண்டு முதலாக ஐ நா சபையின் அங்கீகாரம் பெற்று ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8 ஆம் நாள்உலகம் முழுவதுமாகக் கொண்டாடப்படுகிறது.