உலக எலிகள் தினம் – ஏப்ரல் 04

உலக எலிகள் தினம் – ஏப்ரல் 04

“இதுகளோட பெரிய தொல்லையாப் போச்சு. எதையும் விடறதில்லை. துணியிலிருந்து சாப்பாடு வரைக்கும் வாய வெச்சுட்டுப் போகுதுங்க. இதுகள எப்படி விரட்டறதுன்னு தெரியல. நாம பொறிய வெச்சா அதுங்க நமக்கு மேல புத்திசாலிகளா அதையும் தள்ளிட்டு தப்பிச்சுப் போகுதுங்க...’’ இப்படிப்பட்ட வசனங்களை தினம் எங்காவது கேட்டுக்கொண்டுதான் உள்ளோம்.

      யார் அந்த இதுகள்? இன்றைய நாளின் ஹீரோக்கள் அவர்கள்தான். ஆம் நம் வீடுகளிலும் அலுவலகங்களிலும் அன்றாடம் நம்முடன் வாழ்ந்து வரும் எலிகளைத்தான் சொல்கிறேன்.

     அட இதுகளுக்குக்கூட ஒரு தினமா? என்று சொல்லி விடாதீர்கள். எலிகள் மீதான நமது எதிர்மறை சிந்தனைகளை மாற்றி அவற்றை கொண்டாடுவதற்கும் அவற்றின் பராமரிப்பு மற்றும் அவற்றுக்கான தேவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவதற்கும் எலிகளை செல்லப்பிராணியாக வளர்க்கும் அமெரிக்காவைச் சேர்ந்த எலி ஆர்வலர்கள் கொண்ட குழுவை சேர்ந்தவர்கள் ஏப்ரல் 4ஆம் தேதியான இந்த தினத்தை உலக எலிகள் தினமாக அறிவித்து கொண்டாடி வருகின்றனர்.

     பாலூட்டி இனத்தை சார்ந்த எலிகள் கொறித்துண்ணிகள் என்று அழைக்கப்படுகின்றன. காரணம் எலிகளின் முன் பற்கள் ஆண்டுக்கு நான்கரை முதல் ஐந்தரை இன்ச் வரை வளர்வதால் அதன் வளர்ச்சியின்  அளவைக் குறைக்க எலிகள் எதையாவது கொறித்த வண்ணம் இருக்குமாம். ஆகவேதான் நமது ஆடைகளும் அவற்றுக்கு பலியாகி விடுகிறதோ?  

    உலக அளவில் பல்வேறு இன எலிகள் இருந்தாலும் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளில் காணப்படக்கூடியதாக சுமார் 56 வகையான எலிகள் மட்டுமே கண்டறியப் பட்டுள்ளது. மற்றவைகள் அடர்ந்த காடுகள் மற்றும் சதுப்பு நிலங்களில் வசிக்கின்றன.

     இதில் தமிழ்நாட்டில் சுண்டெலி, வெள்ளை எலி, மூஞ்சுறு, வயல் எலி,  பெருச்சாளி, ஆகியவையே பெரும்பாலும் உலா வருகின்றன. இதில் சுண்டெலி என்பது அளவில் சிறியதாக கண்கள் அழகாக துறுதுறுப்புடன் ரசிக்கும் படி இருக்கும். குழந்தைகளுக்கு சொல்லப்படும் கதைகளில் நிச்சயம் சுண்டெலிக் கதைகளும் அடங்கும். இந்த சுண்டெலிகள் புன்செய் நிலங்களில் வளைகளை அமைத்து  அவற்றை இருப்பிடமாக கொண்டு தானியங்களை உண்டு வாழக்கூடியவை.

      வெள்ளை எலிகள் பெயருக்கு ஏற்ப அடிபாகம் வெள்ளை நிறமாகவும் உடலின் மேற்புறம் சற்று பழுப்பு நிறமாகவும் காணப்படும். மூஞ்சுறு எலிகள் வீட்டில் அதிகம் வாழ்பவை. உடல் மினுமினுப்புடன் சற்று நீண்டதாகவும், தலைப்பகுதி கூராகவும் வால் குட்டையாகவும் இருக்கும். இவைகள் குடுகுடுவென்று ஒரு இடத்தில் நில்லாமல் ஓடுவது பார்க்க அழகாக இருக்கும். இவைகளுக்கு நம்மால் இடையூறு ஏற்பட்டால் கீச் கீச்  சத்தத்துடன் ஓடும். பொதுவாக இந்த எலிகளை ஆன்மீகத்துடன் தொடர்பு படுத்தி வீட்டில் இருந்தால் நல்லது என்று நம் முன்னோர் சொன்னதன் தாத்பர்யம் புரியவில்லை. ஒருவேளை இவைகள்தான் முதற்கடவுள் விநாயகரின் வாகனம் என்பதாலோ? தெரிந்தவர்கள் சொல்லலாம்.

     நன்செய் நிலங்களில் மட்டுமே வசிக்கக்கூடியவை வயல் எலிகள். உணவுக்காக வயலில் உள்ள பயிர்களை நாசம் செய்வதால் இவைகளுக்கு விவசாயின் பகைவன் என்றும் பெயருண்டு. அடுத்து  உருவத்தில் பெரிதாக இருக்கும் பெருச்சாளிகள். பார்க்க பெரியதாகவும்  சற்று அருவருப்பைத் தருவதாகவும் இருக்கும் இவை, மனிதர் களின் வாழ்விடங்கள் உள்ள சாலைகள், சாக்கடை போன்ற இடங்களில் பொந்துகளை ஏற்படுத்தி அங்கு வசித்து  மனிதர்கள் போடும் உணவு கழிவுகளை தின்று வாழக்கூடியவை.

      புத்திசாலித்தனமும், குறும்புத்தனமும் கொண்ட எலிகளை பயன்படுத்திதான் கடந்த 200 ஆண்டுகளாக புதுவித நோய்க்காக மனிதர்களுக்கு தயாரிக்கப்படும் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் போன்றவைகளை செலுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பரிசோதனை எலிகள் உண்மையில் நமக்காக தியாகம் செய்யும் உயிர்களாக இருப்பதால்தான் மருத்துவ உலகில் தினம் புதுப்புது மருந்துகள் கண்டுபிடிக்கப்படுகின்றன.  

      எலிகள் சார்ந்த ஆராய்ச்சிக்காக  நோபல் பரிசுகளும் வழங்கப்படுகிறது. இத்தகைய சிறப்புகளை கொண்ட எலிகளின் மேன்மையைப் புரிந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்காலத்தில் இருந்துதான் மக்கள்  இவற்றை செல்லப் பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். இன்றளவும் எலிகள் என்றாலே நம்மில் பலருக்கு அருவருப்புதான் ஏற்படுகிறது. உடனே அதை அடித்துக் கொல்லவே முயற்சிக்கிறோம்  காரணம் அதன் தோற்றம் மட்டுமல்ல, வீடுகள் முதல் அலுவலகம் வரை பொருள்களை நாசம் செய்யும் அதன் குணமும், எலிக்காய்ச்சல் போன்ற நோய்களை பரப்புவதும்தான்.

       எந்த உயிர்களிலும் நன்மையும் உண்டு தீமையும் உண்டு. நமக்காக இடம் தந்த இந்த பிரபஞ்சத்தில் வாழ அனைத்து உயிர்களுக்கும் உரிமை உண்டு. ஆகவே இனி எலிகள் மீதான அருவருப்பை நீக்கி அவற்றையும் புரிந்து கொள்ள முயல்வோம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com