இலங்கையில் 13வது திருத்தச் சட்டம் - தமிழர் பிரச்னையில் இந்தியா தலையிடவேண்டும், தமிழக பா.ஜ.கவின் புதிய கோரிக்கை

இலங்கையில் 13வது திருத்தச் சட்டம் - தமிழர் பிரச்னையில் இந்தியா தலையிடவேண்டும், தமிழக பா.ஜ.கவின் புதிய கோரிக்கை

நாளை பிப்ரவரி 4, இலங்கையின் சுதந்திர தினம். நாடு சுதந்திரமடைந்து 75வது ஆண்டு நிறைவு பெற்றதை பவளவிழாவாக கொண்டாடி வருகிறது. பொருளாதார நெருக்கடிக்கு நடுவேயும் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தமிழ் தேசிய கூட்டணியினருடன் தொடர்ந்து பேசி வருகிறார். பவள விழாவை முன்னிட்டு அறிவிப்பு வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அ.தி.மு.க எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டிருக்கும் நிலையில் அது குறித்து டெல்லி மேலிடத்திடம் பேசி முடிவெடுக்க டெல்லிக்கு சென்றிருக்கிறார்கள். இந்நிலையில் இலங்கை தமிழர் பிரச்னையை திடீரென்று கையில் எடுத்துள்ள தமிழக பா.ஜ.க நிர்வாகிகள், வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளித்திருக்கிறார்கள்.

முன்னதாக அகில இந்திய பா.ஜ. செயல் தலைவர் ஜே.பி. நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசிய தமிழக பா.ஜ.க நிர்வாகிகள், இடைத்தேர்தல் நிலவரம் பற்றி விரிவாக பேசியிருக்கிறார்கள். பின்னர் அங்கிருந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சந்தித்தார். உடன் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இருந்திருக்கிறார்கள்.

இலங்கையில் 13-வது சட்டத் திருத்தத்தை எந்த மாற்றமுமில்லாமல் உடனடியாக நடைமுறைப்படுத்த மத்திய அரசு தலையிட வேண்டும் என்னும் கோரிக்கை மனுவை வெளியுறவுத்துறை அமைச்சரிடம் சமர்ப்பித்தார்கள். இலங்கையின் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இந்தியா தொடர்ந்து அக்கறை காட்டி வருகிறது. ஆனால், தமிழர் இனப்பிரச்னை சம்பந்தமாக இதுவரை வெளிப்படையான கோரிக்கைள் எதுவும் முன்வைக்கப்பட்டதில்லை.

13-வது திருத்தச் சட்டம், இலங்கையில் தமிழர் இனப் பிரச்னையை தீர்க்க இந்தியா முன்னெடுத்த விஷயம். 1987-ல் அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும், இலங்கை அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்தனேவுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் முக்கியமான ஷரத்து. நிலம், நிதி, காவல்துறை உள்ளிட்ட அதிகாரங்களை மாகாண அரசுக்கு உறுதி செய்யும் ஷரத்து இன்னும் அமலுக்கு கொண்டு வரப்படவில்லை.

ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னர் இலங்கை இனப்பிரச்னை பற்றி பேசுவதை காங்கிரஸ் கட்சி நிறுத்திவிட்டது. தீவிரமாக தமிழ் தேசிய அரசியல் பேசி வருபவர்கள் கூட கண்டுகொள்ளாமல் உள்ள 13வது திருத்தச் சட்டம் பற்றி பா.ஜ.க பேச ஆரம்பித்திருப்பது தமிழக அரசியல் வட்டாரங்களில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com