இந்தியாவில் 7 சதவீத வளர்ச்சி; சீனாவுக்கு கஷ்டகாலம் – ஆய்வு சொல்வது என்ன?

இந்தியாவில் 7 சதவீத வளர்ச்சி; சீனாவுக்கு கஷ்டகாலம் – ஆய்வு சொல்வது என்ன?

தேசிய புள்ளியியல் துறையின் முதல் கட்ட மதிப்பீடுகளின் படி, நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி விகிதம் 7 சதவீதம் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நிதியாண்டு உடன் ஒப்பிடும்போது வளர்ச்சி விகிதம் குறைவு என்றாலும் ஜி.வி.ஏ (Gross Value Added) 6.7 சதவீதம் வளர்ச்சி பெறுமென்று தெரிகிறது.

மின்சாரம், கேஸ், தண்ணீர் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் பயன்பாடு 9 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கல்வி, ஆரோக்கியம் போன்ற தனிநபர் சார்ந்த சேவைகளுக்கான வளர்ச்சி 7.9 சதவீதம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்ற ஆண்டு வளர்ச்சி விகிதம் 8.4 சதவீதம் இருந்தது. அரையாண்டில் 6.2 சதவீதம் மட்டுமே இருந்தது. உக்ரைன் போர் முக்கியமான காரணமாக சொல்லப்பட்டது. ரிசர்வ் வங்கியும் 7 சதவீத வளர்ச்சியை ஆரம்பத்தில் கூறியிருந்தது. பின்னர் 6.8 சதவீதமாக குறைத்துக்கொண்டு விட்டது. உலக வங்கி மட்டுமல்ல ரேட்டிங் ஏஜென்ஸிகளும் இந்தியா 7 சதவீத வளர்ச்சி பெறும் என்று தெரிவித்தன.

உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் நிலைமை பரவாயில்லை என்கிறார்கள். சீனாவில் கொரானா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சீனாவின் பொருளாதாரம் நெருக்கடியை சந்திக்க ஆரம்பித்திருக்கிறது.

நடப்பாண்டில் உலகாளவிய வளர்ச்சி குறித்து சர்வதேச நிதி ஆணையத்தின் இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா பேசியிருக்கிறார். உக்ரைன் போர், பணவீக்க விகிதம் அதிகரிப்பு, தொடரும் விலைவாசி உயர்வு குறித்தும் ஆய்வுகள் நடத்தப்பட்டதாக கூறியிருக்கிறார்.

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவின் வளர்ச்சி விகிதம், உலகத்தின் சராசரி வளர்ச்சி விகிதத்தை விட குறைவாக இருக்கும் என்பது அவரது கணிப்பு. அடுத்து வரப்போகும் இரண்டு மாதங்களும் சீனாவுக்கு நிச்சயமாக சோதனைக்காலமாக அமையும்.

சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், உலகப் பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பகுதியானது மந்தநிலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வட்டி விகிதம் உயர்த்தப்பட்டிருக்கிறது. தினமும் ஆட்குறைப்புகளும் நடந்த வருகின்றன. உலகளவில் பொருளாதார மந்தநிலை நீடிக்க வாய்ப்பிருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, உலகளாவிய சூழலை நம்மால் சமாளிக்க முடியும் என்கிறார்கள். சீனாவின் கொரானா சூழல், இந்தியாவுக்கும் வந்தால் நிலைமை தலைகீழாகிவிடும். கொரானா முதல் அலை அப்படித்தான் ஆரம்பித்தது. " இன்று நீ, நாளை நான் என்பது உண்மைதானே! "

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com