2024 அதிபர் தேர்தலில் போட்டியிட தகுதியானவர் என்று 80 வயது ஜோ பைடனுக்கு மருத்துவர்கள் சான்று!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார் என்று மருத்துவர்கள் சான்று அளித்துள்ளனர். இதையடுத்து 80 வயதான அவர், 2024 ஆண்டு அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது தொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் எனத் தெரிகிறது.
அதிபர் ஜோ பைடன் முழு உடல் மருத்துவப் பரிசோதனைக்குச் சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் 80 வயதான ஜோ பைடனுக்கு சிறுசிறு பிரச்னைகள் இருந்தபோதிலும் மீண்டும் அதிபராக பதவி வகித்து நாட்டை நிர்வகிக்கும் அளவுக்கு அவருக்கு உடல் தகுதி உள்ளது என்று தெரிவித்துள்ளனர். மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கு 2024 இல் வயது 82 ஆக இருக்கும்.
இந்த தகவல்களை பைடனின் மருத்துவர் கெவின் ஓ’கன்னோர் ஓர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர்களிலேயே மிகவும் வயதானவரான ஜோ பைடன், வாஷிங்டன் புறநகர் பகுதியில் உள்ள வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைகளை செய்துகொண்டார். கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கிய மருத்துவப் பரிசோதனை வியாழக்கிழமை முடிந்தது.
2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது குறித்து ஜோ பைடன் முறைப்படி அறிவிக்கவில்லை என்றாலும் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று தெரிகிறது.
குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். கடந்த 2020 தேர்தலில் தேர்தலில் பைடனிடம், டிரம்ப் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
கோவிட் தொற்றுக்காலத்தை பைடன் திறமையாக சமாளித்தார், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளின் போரை முடிவுக்கு கொண்டுவந்தார், உக்ரைனுக்கு எதிராக ரஷியா போர் தொடுத்து வரும் நிலையில் மேலைநாடுகளை ஒன்று சேர்ப்பதில் அவர் முக்கிய பங்குவகித்தார் என்று சொல்லப்பட்டாலும் அவரது உடல்நிலையும் வயதும் போட்டியிட இடம்கொடுக்குமா என்ற கேள்வி இருந்துவந்தது. மேலும் பைடன், மனநிலை சரியில்லாதவர் என்று குடியரசுக் கட்சியினர் வேறு பிரசாரம் செய்து வருகின்றனர்.
“அதிபர் ஜோ பைடன் புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துவதில்லை. குடிப்பழக்கமும் அவருக்கு கிடையாது. 2022 ஆம் ஆண்டில் அவருக்கு கோவிட் தொற்று பாதிப்பு இருந்த்து. அதுவும் முறையான சிகிச்சைக்கு பின் சரியாகிவிட்டது. அவருக்கு லேசான வயிற்றுப் பிரச்னையும், முதுகு வலியும் உள்ளது. இது நீண்டநாளாகவே உள்ளது. இதனால் எந்த பிரச்னையும் இல்லை. அவருக்கு நரம்புத்தளர்ச்சியோ அல்லது பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகளோ இல்லை.
வாரத்திற்கு ஐந்து நாள் அவர் தொடர்ந்து வேலை செய்து வருகிறார். 6 அடி உயரமும், 80 கிலோ எடையும் உள்ள பைடனுக்கு உடல் ரீதியாக எந்த பிரச்னையும் இல்லை. அவர் நல்ல உடல்நலத்துடனேயே இருக்கிறார்” என்று மருத்துவர் கெவின் ஓ’கன்னோர் தெரிவித்துள்ளார்.
ஜோ பைடன் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட விரும்பினால், அவரை ஆதரிக்க ஜனநாயக கட்சி தயாராக இருப்பதாகவே தெரிகிறது. ஆனாலும், சமீபத்தில் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் பைடன் மீண்டும் போட்டியிடுவதை வாக்காளர்கள் விரும்பவில்லை எனத் தெரிகிறது. அவருக்கு வயதாகிவிட்டது. அவரால் பணிகளை சரிவர செய்வது கடினம் என்ற கருத்தும் அவர்களிடம் உள்ளது.
குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு டிரம்புக்கு போட்டியாக அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக இந்திய வம்சாவளி நிக்கி ஹாலே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. டிரம்ப் போட்டியிட்டாலும் அவரும் மருத்துவச் சான்றிதழ் அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.