அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் இந்திய பெண் உள்பட 9 பேர் பலி!
அமெரிக்காவில், டெக்ஸாஸ் மாநிலத்தில் டல்லாஸில் மக்கள் அதிகம் கூடும் ஒரு வணிக வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 27 வயது இந்திய பெண் என்ஜினீயர் உள்பட 9 பேர் பலியானார்கள்.
டல்லாஸில் உள்ள பிரபலமான அல்லன் ப்ரீமியம் வணிக வளாகம் உள்ளது. அமெரிக்காவில் வேலைசெய்யும் ஹைதராபாதைச் சேர்ந்த பெண் என்ஜினீயர் ஐஸ்வர்யா தாடிகொண்டா என்ற பெண் தனது நண்பர்களுடன் ஷாப்பிங் செய்துகொண்டிருந்தார். அப்போது அங்குவந்த துப்பாக்கி ஏந்திய மாரிசியோ கிரேஸியா என்ற நபர் சரமாரியாக சுட்டத்தில் 9 பேர் பலியானதாக நியூயார்க் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணி அளவில் நடந்துள்ளது. வாடிக்கையாளர்களால் அந்த ஷாப்பிங் மால் நிரம்பி வழிந்தது. இந்த நேரத்தில் 33 வயதான மாரிசியோ கிரேசியா திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் ஐஸ்வர்யா உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர். எனினும் கண்காணிப்பு போலீஸார் அந்த மர்ம நபரை சுட்டுக்கொன்றனர்.
ஐஸ்வர்யா ஒரு தனியார் நிறுவனத்துக்காக என்ஜினியராக வேலை செய்து வந்தார். இவரது தந்தை ரெங்கா ரெட்டி மாவட்டத்தில் நீதிபதியாக பணிபுரிந்து வருகிறார்.
துப்பாக்கிச்சூடு நடப்பதற்கு சற்று முன்னர்தான் ஐஸ்வர்யா தனது குடும்பத்தினருடன் அலைபேசியில் பேசியுள்ளார். எனினும் இந்த சம்பவத்துக்கு பின்னர் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இந்நிலையில் துப்பாக்கி சூடில் ஐஸ்வர்யா இறந்த சம்பவம் அவரது வீட்டாருக்கு ஞாயிற்றுக்கிழமைதான் தெரியவந்துள்ளது. இதைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர் என்று நீதிபதி குடும்பத்துக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாதில் என்ஜினீயரிங் படிப்பை முடித்த ஐஸ்வர்யா, அமெரிகாவில் மேற்படிப்பு முடித்து கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக அங்கேயே வேலை செய்து வந்தார்.
இதனிடையே கண்மூடித்தனமாக நடந்த இந்த படுகொலைச் சம்பவம் நெஞ்சை பதறவைத்துவிட்டதாகவும், இறந்தவர்களுக்காக பிரார்த்திப்பதாகவும் அந்த ஷாப்பிங் மால் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். மேலும் தகுந்த நேரத்தில் போலீஸார் தலையிட்டு மர்ம நபரை சுட்டுக் கொன்றதையும் பாராட்டுவதாகவும் தெரிவித்தனர்.
அமெரிக்காவில் இதுபோன்று துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெறுவது வழக்கமாகிவிட்டது. இந்த ஆண்டு மட்டும் இதுவரை 198 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. சமீபத்தில் டெக்ஸாஸ் பள்ளியில் நடந்த துப்பாக்கிசூட்டில் 19 குழந்தைகளும், கடந்த ஆண்டு மே 22 ஆம் தேதி ஒரு தொடக்கப்பள்ளியில் மர்ம நபர் சுட்டதில் 2 பேர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.
சில நாட்களுக்கு முன்பு அட்லான்டாவில் ஒரு மருத்துவமனைக்கு சென்ற மர்ம நபர் ஒருவர் கைத்துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் ஒருவர் உயரிழந்தார், தவிர 4 பேர் காயமடைந்தனர். எனினும் அந்த மர்ம நபர் பின்னர் போலீஸாரிடம் பிடிபட்டார்.
கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் தேதி கலிபோர்னியாவில் ஒரு ஹோட்டலில் மர்ம நபர் நுழைந்து துப்பாக்கியால் சுட்டதில் 11 பேர் பலியானார்கள். இதையடுத்து நடந்துள்ள இரண்டாவது படுகொலை சம்பவமாகும் இது.