அமேசானில் ரூ.2.47 லட்சம் மதிப்புள்ள பொம்மைகள், பூட்ஸ் ஆர்டர் செய்த 5 வயது சிறுமி!

அமேசானில் ரூ.2.47 லட்சம் மதிப்புள்ள பொம்மைகள், பூட்ஸ் ஆர்டர் செய்த 5 வயது சிறுமி!

மெரிக்காவின் மாசசூசெட்ஸைச் சேர்ந்த ஜெஸிக்கா நூன்ஸ் என்பவர், தன் 5 வயது மகள் லைலாவுடன் காரில் பயணிக்கும் போது, அவளுக்குத் தனது மொபைல் ஃபோனைக் கொடுத்தால், வீட்டிற்குச் செல்லும் வரை காரில் குழந்தை அமைதியாகப் பயணிப்பாள் என்று எண்ணி அதை அவளிடம் கொடுத்திருக்கிறார். ஆனால், ஜெஸிக்காவுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை அது எப்படியானதொரு நஷ்டத்தில் தன்னைக் கொண்டு விடப்போகிறது என்று! ஜெஸிக்கா தன் மகளின் அமேஸான் தேடுதிறனைக் குறைத்து மதிப்பிட்டு விட்டார். அமேசானில் தனக்குப் பிடித்தமான பொருட்களைத் தேடும் மகளின் திறன் இத்தனை கூர்மையாக இருக்கும் என்று தெரிந்திருந்தால் ஒருவேளை மொபைல் போனை குழந்தையிடம் கொடுத்திருக்க மாட்டாரோ என்னவோ?!  அம்மாவின் மொபைல் போன் கைக்கு கிடைத்ததுமே, லைலா, உண்மையில் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்ப்ரீயில் மூழ்கிப் போகிறார்.

இப்படியாக, லைலா கடந்த மாதம் தனது தாயின் வங்கிக் கணக்கு மூலம் $3,000 (ரூ 2.47 லட்சம்) மதிப்புள்ள பொருட்களை அமேசான் நிறுவனத்தில் ஆர்டர் செய்ததாக WJAR தெரிவித்துள்ளது. ஜெஸிக்காவின் அமேசான் கமர்சியல் கார்ட்டில் பொம்மைகள் மற்றும் 10 ஜோடி கௌ கேர்ள் பூட்ஸ்கள் இருந்தன என்பதும் தெரியவந்துள்ளது.

திடீரென தனது வங்கிக் கணக்கில் பணம் குறைவதையும், கார்ட்டில் ஏராளமான பொருட்கள் ஆர்டர் செய்யப் பட்டிருப்பதையும் கண்டு திணறிப்போனேன்,  “ யாரோ 10 மோட்டார் சைக்கிள்கள், ஒரு ஜீப் மற்றும் 7 ஆம் நம்பர் அளவு கொண்ட 10 ஜோடி கௌ கேர்ள் பூட்ஸ் ஆகியவற்றை ஆர்டர் செய்திருப்பதைக் கண்டறிந்த  நான் எனது அமேசான் ஆர்டர் வரலாற்றைச் சோதித்துப் பார்த்தேன்," என்று செய்தியாளர்களிடம் Nunes கூறினார்.

"பைக்குகளும் ஜீப்பும் சுமார் $3,180 டாலருக்கு ஆர்டர் செய்யப்பட்டிருந்தன. பூட்ஸ் மட்டும் சுமார் $600 விலை காட்டியது" பிறகு தான் தெரிய வந்திருக்கிறது இது குட்டிப் பெண் லைலாவின் கைங்கர்யம் என்று.  லைலா,  தனது பொம்மைகள் மற்றும் பூட்ஸைத் தேர்ந்தெடுக்க அமேசான் செயலியில் "Buy Now" ஆப்சனைக் கிளிக் செய்ததாக அவரது தாயார் கூறினார்.

நல்ல வேளை, அதிர்ஷ்டவசமாக, அந்தப் பெண் மோட்டார் சைக்கிள் ஆர்டர்களில் பாதியையும் கௌகேர்ள் பூட்ஸையும் ரத்து செய்தார். மீதமுள்ள ஐந்து மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இரண்டு இருக்கைகள் கொண்ட குழந்தைகள் ஜீப் ஏற்கனவே குழந்தைக்கு வழங்கப் பட்டிருக்கலாம்.

லீலா ஏன் அமேசானில் ஒன்றுக்குப், 10 மோட்டார் சைக்கிள்களை ஆர்டர் செய்தாய்? என்ற கேள்விக்கு குழந்தை அளித்த பதில், "ஏனென்றால் நான் அவற்றில் ஒன்றை விரும்பினேன்," என்பதே!.

சிறுமியின் இச்செயல் நகைப்புக்குரியதாக இருந்த போதும், அம்மாவுக்கே தெரியாமல் அவரது வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி குழந்தையால் அமேசானில் பொருட்கள் வாங்க முடிகிற அளவுக்கு அவரது அம்மா தனது மொபைலைப் பாதுகாப்பற்ற முறையில் வைத்திருப்பது சரியா?! எனும் கேள்வி எழுகிறது மக்களிடையே! தன் அனுமதியின்றி, இப்படியொரு மாபெரும் ஆன்லைன் கொள்முதல் செய்ததற்காக நூன்ஸ் தனது மகளுக்கு அறிவுரை கூறவில்லை.

மாறாக "அவளுக்குத் தெரிந்திருந்தால் அவள் சரியாக நடந்திருப்பாள், சீக்கிரமே அவள் தெரிந்து கொள்வாள். அதுவரை காத்திருக்க வேண்டியது தான் என்று இந்த விஷயத்தை அப்படியே நிதானமான புத்தியுடன் கடந்து விட்டாராம் ஜெஸிக்கா.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com