காதலிக்க மறுத்த பெண்ணிடம் ரூ.24 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு! இது எப்படி இருக்கு?
காதலிப்பதாக சொல்லியும் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளாமல் காதலிக்க மறுத்த பெண் மீது ரூ.24 கோடி (3 மில்லியன் டாலர்) கேட்டு வழக்கு தொடுத்துள்ளார் சிங்கப்பூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.
சிங்கப்பூரைச் சேர்ந்தவர் கெளசிகன். இவர் 2016 ஆம் ஆண்டில் முதன் முதலாக நோரா டான் என்னும் பெண்ணை சந்தித்தார். இருவரும் நெருக்கமான நண்பர்களாயினர்.
இந்த நிலையில் கெளசிகனுக்கு நோரா டன் மீது காதல் ஏற்பட்டது. ஆனால், அந்தப் பெண், அந்த இளைஞரிடம் நட்புடனேயே பழகி வந்தார்.
கடந்த 2020 ஆம் ஆண்டுதான் பிரச்னை தொடங்கியது. முதலில் நோராவிடம் அன்பாக பழகி வந்த கெளசிகன், மெல்ல மெல்ல அவரை காதலிக்கத் தொடங்கினார். ஆனால், அந்தப் பெண் எல்லை மீறாமல் நட்புடனேயே பழகி வந்தார்.
தனது காதலை புரிந்துகொள்ளமல் நோரா புறக்கணிப்பதாக கருதிய கெளசிகன், தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக அவள் மீது வழக்கு தொடர முடிவு செய்தார். ஆனால், போடவில்லை. இந்த நிலையில் நோரா டன், கெளசிகனுடன் இணைந்து மனநல ஆலோசனைகூறும் டாக்டரை சந்திக்க ஒப்புக்கொண்டார்.
இருவரும் மனநல ஆலோசகரை சந்தித்தனர். அப்போது நோரா டன், கெளசிகனிடம் நட்புறவுடனேயே பழகி வந்தேன். அவரை என்னால் காதலிக்க முடியாது. அவர் மீது அந்த நோக்கத்துடன் நான் பழகவில்லை என்று பளீச்சென்று தெரிவித்துவிட்டார்.
அந்த பெண் அளித்த பதில் கெளசிகனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நான் உன்னை காதலிக்கிறேன். நீயும் என்னை காதலித்துத்தான் தீர வேண்டும். இல்லையெனில் எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக நஷ்டஈடு கேட்டு வழக்கு போடுவேன். உன்னை வாழவிடமாட்டேன் என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பான ஆலோசனை சுமார் ஒன்றரை வருடம் நடந்தது. ஆனாலும் நோரா டன், தனது முடிவை மாற்றிக்கொள்ளவேயில்லை. உன்னை காதலிக்கவும் முடியாது, திருமணம் செய்துகொள்ளவும் முடியாது. உன்னுடன் நட்பே வேண்டாம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.
மேலும் கெளசிகனுடன் இருந்த தொடர்பையும் துண்டித்துவிட்டார். ஒருதலைக்காதலால் மனவேதனை அடைந்த கெளசிகன், காதலிக்க மறுத்தற்காகவும், தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காகவும் அந்த பெண்ணிடம் 3 மில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.