கோடி கோடியாய் போனஸ் கொடுத்த கம்பெனி!

கோடி கோடியாய் போனஸ் கொடுத்த கம்பெனி!

மீபத்தில் கூகுள், மைக்ரோசாஃப்ட், ட்விட்டர், அமேசான், ஐபிஎம் போன்ற பல முன்னணி நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான பணியாளர்களை நஷ்டக் கணக்குக் காட்டி வீட்டுக்கு அனுப்பி விட்டது. அதோடு, பலருக்கும் சம்பளக் குறைப்பு செய்து அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் சீனாவில் இயங்கிவரும், ‘ஹெனன் மைன்’ என்ற சுரங்க நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு கோடிக்கணக்கில் போனஸ் கொடுத்ததோடு மட்டுமில்லாமல், சம்பள உயர்வும் செய்தும் உலக நாடுகளையே உற்றுப் பார்க்க வைத்துள்ளது.

கிரேன் உள்ளிட்ட கனரக வாகனங்களைத் தயாரிக்கும் இந்த நிறுவனம் இந்தியா, எகிப்து, ஆஸ்திரேலியா, வியட்னாம், தாய்லாந்து, அமெரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம், பிலிப்பைன்ஸ், மலேசியா, மால்டா, சவுதி அரேபியா, பெரு, சிங்கப்பூர், எத்தியோப்பியா போன்ற நாடுகளுக்கு தங்களது உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. பொருளாதார நெருக்கடியில் சீனா உள்ளிட்ட உலக நாடுகளே மந்த நிலையில் சிக்கித் தவிக்கும்போது, இந்த நிறுவனத்தின் கடந்த ஆண்டு வருவாய் மட்டும் 23 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தின் மொத்த வருவாய் 9.16 பில்லியன் யுவான். அதாவது 1.1 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளதாம்.

லாபத்தில் மகிழ்ந்த இந்த நிறுவனம், அந்த சந்தோஷத்தை பகிர்ந்துகொள்ளும் விதமாக தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களையும் உற்சாகப்படுத்தவும் ஊக்கப்படுத்தவும் எண்ணி அதற்கான ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்வில் 60 மில்லியன் யுவான், அதாவது 72.48 கோடி ரூபாய் பணத்தை மலை போல் குவித்து வைத்து அந்நிறுவன ஊழியர்களை சந்தோஷத்தில் திளைக்க வைத்துள்ளது.

அந்த நிறுவனம் இந்த லாபத்தை ஈட்ட முக்கியக் காரணமாக இருந்து பணியாற்றிய மூன்று விற்பனை மேலாளர்களுக்கு தலா 6 கோடி ரூபாய் கொடுத்தும், மற்ற பணியாளர்களுக்கு ஒரு மில்லியன் யுவானும் கொடுத்து அந்த நிறுவனம் சந்தோஷப்படுத்தியிருக்கிறது. இந்த போனஸ் தொகையோடு மட்டும் நின்று விடாமல், அந்த நிறுவனம் தனது அனைத்து ஊழியர்களுக்கும் 30 சதவிகித சம்பள உயர்வையும் அளித்திருக்கிறது. இந்த செய்தி சமூக ஊடகங்களில் பெரும் வைரலாகப் பேசப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com