மனிதர்களுக்கும் மட்டும் தான் காதலர் தினமா, எங்களுக்கும் தான் என்கிறார்கள் சூரியனும் பூமியும். 'அரோரா லைட்ஸ்" என்னும் இந்த ஒளி பரிமாற்றத்தை செய்து கொண்டது பூமியும் சூரியனும் .நேற்று முன்தினம் இரவு கனடா நாட்டின் வான்கோவர் நகரத்திற்கும் கேல்கேரி நகரத்திற்குமிடையே தான் இந்த அரோரா லைட்ஸ் ஒளி நடனம்.
சூரியனிலிருந்து பொதுவாக மணிக்கு 720 லட்சம் கி.மீ. வேகத்தில், ஆங்கிலத்தில் ‘ions’ என்றழைக்கப்படும் மின்னணுக்கள், பூமியின் வளிமண்டலத்தைத் தாக்கும்.
இதனால் பூமிக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாமல், பூமியின் காந்தப்புலம் (Earth’s magnetic field) நம்மைப் பாதுகாக்கும்.இது தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கும் ஒரு இயற்கையான நிகழ்வு.

புரோட்டான் மற்றும் எலக்ட்ரான்களை ஏந்திய இந்த மின்னணுக்களை, நம் பூமியின் காந்தப்புலம் வட மற்றும் தென் துருவங்களுக்கு (Earth’s North and South poles) திசை திருப்பி விடுகின்றன. இவை நம் பூமியின் வாயுமண்டலத்தில் உள்ள வாயுக்களுடன் மோதுகையில், சிறிய ஒளிக்கதிர் தோன்றும். இந்தக் கதிர்கள் பல மடங்கு வீரியத்துடன் இருக்கும்போது, அழகிய, வண்ண ஒளிக்கதிர்களை வானத்தில் காண இயலும்.
மின்னணுக்கள் வளிமண்டலத்தின் பிராணவாயுவைத் தாக்கும்போது பச்சை மற்றும் சிகப்புக் கதிர்கள் தோன்றும். அவை நைட்ரோஜன் வாயுவைத் தீண்டும்போது ஊதாக்கதிர்கள் தோன்றும்.
வடதுருவத்தில் தோன்றும் ஒளியை ‘நார்தர்ன் லைட்ஸ்’ என்றும், தென்துருவத்தில் தோன்றும் ஒளியை ‘சதர்ன் லைட்ஸ்’ என்றும் கூறுகின்றனர்.

ஐஸ்லேண்ட், நார்வே, ஸ்வீடன், ஃபின்லேண்ட், ரஷியா, அலாஸ்கா மற்றும் கனடாவின் வடமேற்கு நகரங்களில் இந்த ‘நார்தர்ன் லைட்ஸ்’ அமர்க்களமாகத் தெரியும்.
நவம்பர் முதல் மார்ச் வரை இந்தப் பிரதேசங்களில் பனிக்காலம். சூரியன் விரைவாக மறைந்து இருள் அதிக காலம் சூழும் இந்த மாதங்களில், இந்த ஒளியழகைக் காண மக்கள் ப்ரத்யேகப் பயணங்கள் மேற்கொள்கின்றனர்.
‘லைட் பொல்யூஷன்’ என்றழைக்கப்படும் அதீத வெளிச்சத்தின் தாக்கத்தில் நகரங்கள் இருப்பதால், இருள் சூழ்ந்த காட்டுப்பகுதிகளில் சில நாட்கள் தங்கியும் இயற்கைக் காதலர்கள் இந்த அழகை படமெடுக்கின்றனர்.
முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் முதன் முதலில் இந்தக் கதிர்களை கண்டுள்ளனர். இப்போதும் வடதுருவ காண்டங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள், இந்த ஒளிக்கதிர்களை இறந்து போன நம் முன்னோர்கள் நடத்தும் ஒளி நடனமாகக் கருதுகின்றனர். 1908ம் வருடத்தில், வடக்கு ஐரோப்பாவிலுள்ள நார்வே நாட்டைச் சார்ந்த விஞ்ஞானி க்ரிஸ்டியான் பர்க்லேண்ட்தான், இந்தக் கதிர்களுக்கும் சூரியனுக்கும் உள்ள தொடர்பைக் கண்டுபிடித்தார். இவரை ‘நார்தர்ன் லைட்ஸ்’ன் தந்தை எனப் போற்றுகின்றனர்.
இந்த சூரிய அணுக்களின் தாக்கம் 2014ல் அதிகமாக இருந்ததாகவும், அடுத்து 2025ம் வருடம் அதிகமாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்த காலகட்டங்களில் ‘நார்தர்ன் லைட்ஸ்’ வெளிச்சத்தின் வீரியம் அதிகமாக இருக்கும். ‘ஈக்குவேட்டர்’ என்றழைக்கப்படும் பூமத்திய ரேகையில் இந்தியா உள்ளதால், இங்கு இந்த ஒளிக் கதிர்களை காண இயலாது.