விமானத்தில் பறக்கும் ஆசையால் தோன்றிய சூப்பர் ஐடியா!
கம்போடியாவைச் சேர்ந்தவர் க்ராச் போவ். கட்டுமான தொழிலாளர். இவருக்கு சிறு வயதில் இருந்தே விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை. 30 ஆண்டுகளாகியும் பொருளாதாரம் காரணமாக விமானத்தில் செல்ல வாய்ப்பில்லை என்பதை உணர்ந்த அவர் “விமானம் மாதிரியே வீட்டை கட்டி அதில் வசித்தால் என்ன?” என்ற ஆசையின் வெளிப்பாடுதான் இந்த விமான வீடு.
வாழ்வில் ஒரு முறையாவது விமானத்தில் பயணித்துவிட வேண்டும் என்ற ஆசை நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும். இதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
வசதி படைத்தவர்களுக்கு விமானப் பயணம் என்பது ஒரு சாதாரண விஷயமாக இருக்கலாம். ஆனால், ஏழை எளிய மக்களுக்கோ அது மிகவும் ஆடம்பரமான செலவாகத் தான் தோன்றும். எனவே, அவர்கள் விமானப் பயணத்தை கனவாகவே நினைத்து தம் ஓட்டத்தை முடித்து விடுவார்கள்.
இந்நிலையில், கம்போடிய நாட்டைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளி ஒருவர் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற 30 ஆண்டு கால கனவை, தன் திறமைக்கு ஏற்ப வேறு வடிவில் நிறைவேற்றி காட்டியுள்ளார்.
கம்போடியாவைச் சேர்ந்த 43 வயதான கட்டுமான தொழிலாளர் க்ராச் போவ். இவர் சியாம் ரீப் என்ற மாகாணத்தில் வசித்து வருகிறார். இவருக்கு சிறு வயதில் இருந்தே விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனாலும், தனது பொருளாதார சூழல் கருதி 30 ஆண்டுகளாக அதை கனவாக மட்டுமே சுமந்து வருகிறார்.
இருப்பினும், இவருக்கு தனது ஆசை கனவை வேறு விதமாக நிறைவேற்றி பார்ப்போமே என்ற யோசனை தோன்றியுள்ளது. அதன் விளைவு தான் க்ராச் போவ் தனக்கென பிரத்தியேகமாக வடிவமைத்த விமான வீடு. விமானத்தில் பறந்து செல்லதான் முடியவில்லை. இருந்தால் என்ன விமானத்தின் வடிவில் வீடு ஒன்றை கட்டி அதில் குடியிருக்கலாம் என்று முடிவெடுத்த இவர், விமான றெக்கை, இன்ஜின், படிகட்டுகள் உள்ளிட்ட உதரி பாகங்களை மாதிரிகளாக வடிவமைத்து அச்சு அசல் விமானத்தை போலவே வீடு அசத்தியுள்ளார்.
இரண்டு பெட்ரூம், இரண்டு பாத்ரூம் கொண்ட இந்த விமான வீட்டை சுமார் 20,000 அமெரிக்க டாலர் செலவில் கட்டி முடித்துள்ளார் க்ராச் போவ். தற்போது இவரது விமான வீட்டை வந்து பலரும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். விரைவில் தனது விமான வீட்டின் அருகே காபி ஹவுஸ் ஒன்றை அமைத்து இதை ஒரு சுற்றுலாத் தலம் போல மாற்றி வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ள க்ராச், அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் விரைவில் விமானத்தில் நிச்சயம் பறந்து செல்வேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.