இந்தியாவில் சுமார் இரண்டு  கோடி பேர் ஆஸ்துமாவால் பாதிப்பு... மருத்துவர்கள் தகவல்.

இந்தியாவில் சுமார் இரண்டு கோடி பேர் ஆஸ்துமாவால் பாதிப்பு... மருத்துவர்கள் தகவல்.

ன்று முதல் இன்று வரை மனிதருக்கு தீராத பாதிப்பாக இருந்து வரும் உடல் நலப் பாதிப்புகளில் ஒவ்வாமை மற்றும் சளித்தொல்லையால் ஏற்படும் மூச்சு விட சிரமம் தரும் ஆஸ்துமாதான். உலகம் முழுவதும் உலக ஆஸ்துமா தினமாக கடைபிடிக்கப்படும் மே முதல் வாரத்தில் வரும் செவ்வாய்க்கிழமையிலிருந்து தொடர்ந்து ஆஸ்துமா தடுப்பு விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது.

கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் ஆஸ்துமா விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  இந்த நாட்களில் ஆங்காங்கே பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கருத்தரங்கங்கள் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் தன்னார்வலர்கள் அமைப்புகள் மற்றும் மருத்துவ நிபுணர்களும் ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வுகளை மக்களுக்கு நிகழ்ச்சிகள் மூலம் தந்து வருகின்றனர்.

உலகத்தில் மனிதன் தோன்றியது முதலே ஆஸ்துமாவும் இருந்துள்ளது என்கின்றனர். தொடர்ந்து சளியுடன் இருமலும், தும்மலும் இருந்தால் சிறிது சிறிதாக நுரையீரலில் உள்ள மூச்சுக் குழாயில் நோய்க்கிருமிகள் தாக்கி  மூச்சு குழாயின் உட்புற சுவர்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக அசுத்த நீர் கசிந்து கிருமிகள் தாக்குவதால் மூச்சு குழாய்களின் சுருங்கி விரியும் தன்மை குறைந்து சுத்தமான காற்று உள்ளே செல்லவும் அசுத்த காற்று வெளியேறவும் முடியாமல் சிரமம் ஏற்படுகிறது. காற்று மூச்சுக்குழாயின் உட்புறத்தில்  நீரை கிழித்துக்கொண்டு மூச்சுத் திணறலுடன் வெளியே வருவதையே வீசிங் என்கிறோம். ஒருவருக்கு தொடர்ந்து சளி பிடித்த வண்ணம் இருந்தால் அவர்களுக்கு 30 முதல் 70 சதவீதம் வரை ஆஸ்துமா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

நடப்பாண்டு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சிகிச்சை என்ற மையப்பொருளில் ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து சேலம் மண்டல மருத்துவ வல்லுநர்கள் கூறியதாவது.

“தற்போதைய நிலவரப்படி உலக அளவில் இரண்டு 23.5 கோடி பேர் ஆஸ்துமாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் இரண்டு கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 லட்சம் பேர் வரை இறப்பை தழுவுகின்றனர். ஆஸ்துமாவால் இறப்பவர்கள் 80 சதவீதம் பேர் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினராக இருக்கின்றனர் என்பதும் வேதனைக்குரியது. இந்தியாவைப் பொறுத்தவரை ஒட்டு மொத்தமாக 10 சதவீதம் பேருக்கு ஆஸ்துமா பாதிப்புகள் இருக்கிறது. ஆஸ்துமாவை பொறுத்தவரை வயது வரம்பு முக்கியமில்லை. ஐந்து முதல் 11 வயது உள்ள குழந்தைகளை பத்து முதல் 15 சதவிகிதம் பேருக்கு ஆஸ்துமா பாதிப்புகள் உள்ளன. குழந்தைப் பருவத்தில் வைரஸால் ஏற்படக்கூடிய சுவாச பாதை நோய், தொற்றுகள், முதிர் வயதில் ஆஸ்துமாவுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவித் துள்ளது. சிகரெட் பிடிப்பதால் ஆஸ்துமா வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. புகை பிடிப்பதால் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 5 கோடி பேர் இறக்கின்றனர் என்பதும் மிகவும் அபாயகரமானது முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டால் ஆஸ்துமாவிலிருந்து தப்பிக்கலாம்.

உதாரணமாக குளிர்ச்சி அளிக்கும் பழங்கள், தயிர் போன்ற உணவுப் பொருட்களை உண்பதையும், செல்ல பிராணிகளை கொஞ்சுவதையும் ஆஸ்துமா நோயாளிகள் தவிர்க்க வேண்டும். தூசு பறக்கும் நிறுவனங்களில் பணியாற்றி வருபவர்களும் தூசிகள் பறக்கும் சாலைகளில் வாகனங்களில் செல்பவர்களும்  மாஸ்க் போட்டுக் கொள்வது நல்லது. சுவாசிப்பதில் சிரமம் மார்பில் வலி, இருமல் மற்றும் மூச்சுத் திணறல் பாதிப்பு இருந்தால் ஆரம்ப நிலையிலேயே ஆஸ்துமா பரிசோதனை மேற்கொள்வது மிகவும் அவசியம். இதனால் நோய் முற்றாமல் தவிர்ப்பதோடு ஆபத்தான விளைவுகளையும் தவிர்க்கலாம்” என்ற எச்சரிக்கையுடன் விழிப்புணர்வும் தந்துள்ளனர்.

மருத்துவர்களின் ஆலோசனையுடன் தகுந்த முன் எச்சரிக்கைகளையும் சளி பிடிக்கும் அல்லது ஒவ்வாத உணவுகளைத் தவிர்த்து சத்தான உணவுகளையும் எடுத்துக் கொண்டால் ஆஸ்துமா மட்டுமல்ல எந்த பாதிப்பிலிருந்தும் நம்மைக் காக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com