ட்ரம்ப் மீது குவியும் பாலியல் குற்றச்சாட்டுகள்!
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு இளம் பெண்கள் என்றால் மோகம். வெள்ளை மாளிகையில் அவர் பலமுறை பெண்களிடம் முறைதவறி நடந்து கொண்டுள்ளார் என்று முன்னாள் டிரம்ப் நிர்வாக அதிகாரி அதிரடி தகவல்களை வெளியிட்டுள்ளார்.
டொனால்டு டிரம்ப் அதிபராக இருந்த போது வெள்ளை மாளிகையில் முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸுக்கு ஆலோசகராக இருந்தவர் ஒலிவியா டிரோயி. அவர் நியூஸ்வீக் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், டொனால்டு டிரம்ப் எப்படிப்பட்டவர் என்பது வெள்ளை மாளிகையில் பணிபுரிந்தவர்களுக்கு நன்கு தெரியும். அவர் பலமுறை பெண்களிடம் தவறாக நடந்துகொண்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், முன்னாள் அதிபர் டிரம்ப் தம்மை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் எழுத்தாளர் ஜீன் கரோல் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை நிராகரித்த நீதிமன்றம், அவரிடம் பாலியல் ரீதியில் அத்துமீறி நடந்து கொண்டதற்காக 5 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க உத்தரவிட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் பணிபுரிந்தபோது முன்னாள் அதிபர் டிரம்ப் தங்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக இரண்டு பெண்கள் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்திருந்தனர்.
வெள்ளை மாளிகையில் பத்திரிக்கை செயலராக இருந்த ஸ்டீபனி கிரிஷாம் மற்றும் ஆலோசகராக இருந்த அலிஸ்ஸா ஃபரா இருவரும் பெண்களை சீண்டுவதிலும் அவர்களிடம் தவறாக நடப்பதையும் டிரம்ப் வழக்கமாக்கிக் கொண்டிருந்த்தாக குறிப்பிட்டிருந்தனர்.
சி.என்.என். தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் ஃபரா கிரிஃப்பின், டிரம்பர் பலமுறை பெண்களிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். இது ஆபத்தானது என்று டிரம்பின் தலைமை அதிகாரி மார்க் மெடோஸிடம் தெரிவித்திருந்தேன் என்று கூறியுள்ளார்.
பெண்களிடம் அவர் நடந்துகொண்ட விதத்தை நான் நேரிடையாக பார்த்திருக்கிறேன். வெள்ளை மாளிகையில் நடைபெறும் கூட்டங்களில்கூட அவர் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதுடன், வெளிப்படையாக இரட்டை அர்த்தம் தொனிக்கும் வகையில் பேசியும் வந்தார் என்று ஒலிவியா டிரோயி தெரிவித்துள்ளார்.
டிரம்பின் இந்த நடவடிக்கை வெள்ளை மாளிகையில் பணிபுரியும் மூத்த ஊழியர்கள் அனைவருக்கும் தெரியும். பலமுறை அவர் பெண்களிடம் முறைதவறி நடந்து கொண்டுள்ளார். குறிப்பாக இளம் பெண்கள் என்றால் அவர்களை சீண்டுவதில் டிரம்ப் ஆர்வம் காட்டி வந்தார் என்றார் ஒலிவியா.