விவாகரத்து பெற்ற கொடுமைக்காரக் கணவனிடமே மீண்டும் வாழக் கட்டாயப்படுத்தும் ஆப்கான் அரசு!

விவாகரத்து பெற்ற கொடுமைக்காரக் கணவனிடமே மீண்டும் வாழக் கட்டாயப்படுத்தும் ஆப்கான் அரசு!
VICTOR J. BLUE

தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து அந்த நாட்டில் பரபரப்பான நடவடிக்கைகளுக்கு பஞ்சமே இல்லாமல் போய்விட்டது. அதிலும் குறிப்பாக, பெண் சுதந்திரம் என்பதை அந்த நாட்டில் தேடித்தான் பார்க்க வேண்டும் என்ற சூழல் நிலவி வருகிறது. கல்வி பயிலும் ஆண், பெண்களுக்கு தனித்தனி வகுப்பறைகள், பெண்கள் கண்டிப்பாக ஹிஜாப் அணிய வேண்டும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு உயர்க்கல்வி, வேலை மற்றும் சேவைகளுக்கான அணுகல் மறுப்பு, பெண்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கும் பொது வாழ்வில் பங்கேற்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. வெளியில் எங்கு சென்றாலும் ஆண் துணையோடுதான் செல்ல வேண்டும் என்பது போன்ற கடுமையான கட்டுப்பாடுகளை தாலிபான்கள் அந்நாட்டுப் பெண்கள் மீது விதித்தனர்.

இந்நிலையில், வன்கொடுமை செய்த கணவன்மார்களிடமிருந்து விவாகரத்து பெற்ற பெண்களை மீண்டும் அவர்களுடனேயே சேர்ந்து வாழ வேண்டும் என்று தாலிபான் அரசு கட்டாயப்படுத்தி வருகிறது. கொடுமைக்கார கணவனிடம் பல வருடங்களாக துன்பப்பட்டு வந்த ஒரு பெண், தனது ஆறு மகள்கள் மற்றும் இரண்டு மகன்களுடன் அவனிடம் இருந்து தப்பித்து வீட்டை விட்டு வெளியேறி, தங்களது பெயர்களை மாற்றிக்கொண்டு வேறொரு ஊரில் வசித்து வந்துள்ளனர். ஆனாலும், இப்போது அந்தக் கொடுமைக்கார கணவனிடமே அவர்களை சேர்ந்து வாழச் சொல்லி கட்டாயப்படுத்துகிறது இந்நாட்டு அரசு.

இப்படி வலுக்கட்டாயமாகப் பிடிக்காதவர்களுடன் சேர்ந்து வாழச் சொல்வதை எதிர்த்து அந்நாட்டுப் பெண்கள் சிலர் நீதிமன்றத்தை அணுகி வருகிறார்கள். ஆனால், தாலிபான் உச்ச நீதிமன்றத்தின் செய்தித் தொடர்பாளர் இனாயத்துல்லா, ‘எங்களுக்கு இதுபோன்ற புகார்கள் வந்தால், நாங்கள் ஷரியாவின்படி அவற்றை விசாரிப்போம். இதுபோன்ற வழக்குகளின் அறிக்கைகளை அதிகாரிகள் பரிசீலிப்பார்கள்’ என்று கூறி உள்ளார்.

தாலிபான்களுக்கு முந்தைய அமெரிக்க ஆதரவு பெற்ற அரசாங்கத்தின் கீழ், நகர்ப்புறங்களில் விவாகரத்து விகிதம் அதிகரித்து வந்தது. அதோடு, விவாகரத்து வழக்குகளை விசாரிக்க பெண் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களைக் கொண்ட சிறப்புக் குடும்ப நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன. ஆனால், தற்போது தாலிபான்கள் வந்ததும் பெண் நீதிபதிகளை மொத்தமாக நீக்கிவிட்டு, ஆண் நீதிபதிகள் மட்டுமே பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே, ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியின் கீழ் மகளிர் விவகார அமைச்சகம் மற்றும் மனித உரிமைகள் ஆணையம் சிதைக்கப்பட்டன. ‘முந்தைய அரசாங்கத்தில் வழங்கப்பட்ட விவாகரத்துகளை தற்போதைய தலிபான் ஆட்சி ஒப்புக்கொள்ளுமா?’ என்ற கேள்விக்கு, ‘அது ஒரு சிக்கலான விஷயம்’ என்று குறிப்பிட்டுள்ளார் ஆப்கான் அரசின் செய்தித் தொடர்பாளர். காக்கைகளும் குருவிகளும் கூட சுதந்திரமாகப் பறந்து திரியும் இந்த உலகில் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான உரிமைகள் அடியோட மறுக்கப்பட்டு, அடிமைப்படுத்தப்படுவது கொடுமையிலும் கொடுமையாகத்தான் இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com