74 ஆண்டு வேலையில் விடுப்பே எடுக்காத 90 வயது அசத்தல் மூதாட்டி!

74 ஆண்டு வேலையில் விடுப்பே எடுக்காத 90 வயது அசத்தல் மூதாட்டி!

ஒரு நாள்கூட விடுப்பு எடுக்காமல் வேலைக்குச் செல்வதை பெரும்பாலானவர்களால் யோசித்துப்பார்க்கவே முடிவதில்லை. ஆனால் 90 வயது பெண் ஒருவர் தன் 74 ஆண்டுகள் வேலையில் விடுப்பே எடுக்காமல் பணியாற்றி இருக்கிறார் என்றால் நம்பித்தான் ஆகவேண்டும்!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த மெல்பா மெல்பேன் என்பவர்தான் அந்த 90 வயது மூதாட்டி. இவர், அங்குள்ள பிரபல மாயர் சிமித் பல்பொருள் பேரங்காடியில் 1949ஆம் ஆண்டில் வேலைக்குச் சேர்ந்தார். லிஃஃப்ட் இயக்குபவராகப் பணியில் சேர்ந்த மெல்பாவுக்கு, ஆறு மாதங்களில் ஆடைகள் பிரிவுக்கு மாற்றப்பட்டு பணி உயர்வும் அளிக்கப்பட்டது. பின்னர் அங்கும் அவருக்கு பணி உயர்வு அளிக்கப்பட்டது. அலங்காரப் பொருட்கள் பிரிவுக்கு மாற்றப்பட்டார், மெல்பா. அந்தப் பிரிவிலேயே கடைசிவரை பணியாற்றினார் 90 வயது மெல்பா.

பணியில் சேர்ந்து 74 ஆண்டுகள் ஆன நிலையில், சில நாள்களுக்கு முன்னர் மெல்பா தன் வேலைக்கு ஓய்வு கொடுத்தார். தகவல் அறிந்த ஃபாக்ஸ் நியூஸ் முதலிய உள்ளூர் ஊடகங்கள் மெல்பாவைக் கொண்டாடித் தீர்த்துவிட்டன. இத்தனை வயதிலும் வேலை செய்துகொண்டே இருந்திருக்கிறார்; அதுவும் ஒரு நாள்கூட விடுப்பே எடுக்காமல் பணியாற்றியிருக்கிறாரே என பார்ப்பவர்கள், கேட்டவர்கள் எல்லாரும் மூக்கில் விரலை வைக்கிறார்கள்.

மெல்பாவின் கடைசி வேலையிடமான தில்லார்டின் மேலாளர் ஜேம்ஸ் சாயன்ஸ், மெல்பாவை ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளுகிறார். ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு விற்பனை முறையை வைத்திருப்பார்; ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் அவர்களின் ஒவ்வொரு எதிர்பார்ப்புக்கும் ஏற்ப அவருடைய தொனி இருக்கும்; வாடிக்கையாளருக்கு திருப்தி அளிக்கும்படியாக பதிலளிக்கவும் சேவைசெய்யவுமான இப்படிப்பட்ட ஒருவரின் அனுபவம் எங்களுக்கு வசதியாக அமைந்தது என விவரித்தார்.

தன்னிடமிருக்கும் அனுபவம், திறன் அனைத்தையும் அவர் தன் குழுவினரிடம் பகிர்ந்துகொண்டார்; அவருடைய இத்தனை ஆண்டு கால அனுபவத்தில் எத்தனை பேருக்கு பயிற்சியையும் கல்வியையும் உத்வேகத்தையும் மெல்பா அளித்திருப்பார் எனக் கணக்கிட்டுப் பார்க்கவே முடியாது என்றும் அந்த மேலாளர் பரவசத்தோடு சொல்கிறார்.

தன்னுடன் வேலை செய்தவர்களை எப்போதும் உற்சாகத்தோடு வைத்திருப்பதில் மெல்பாவுக்கு நிகர் அவர்தான் என்கிறார்கள், சக பணியாளர்கள். சாப்பாட்டு நேரத்திலும் சிரிப்போடும் ஏதாவது நகைச்சுவையோடும் வேலைத் தளத்தை கலகலப்பாக வைத்திருப்பார், மெல்பா என்கிறார் அவருடன் 33 ஆண்டுகள் பணியாற்றிய ஜிஞ்சர் விம்ப்ஸ்.

” எதையுமே அது எப்படி இருக்கிறதோ அப்படியே யதார்த்தமாக எடுத்துக்கொள்வார், மெல்பா. நாங்கள் அவரை எக்கச்சக்கமாகப் புகழ்ந்திருக்கிறோம். எங்களுக்கு நிறைய அவர் சொல்லிக்கொடுத்து இருக்கிறார். வாடிக்கையாளர்களைக் கையாள்வதில் அவர் திறமைசாலி. சிறு விற்பனையைக் கூட பெரியதாக ஆக்கும் அளவுக்கு வல்லமை படைத்தவர். அவரைப் பொறுத்தவரை, எப்போதும் வேலை வேலை வேலைதான். எல்லாரிடமும் சிரித்தபடியே வேலைசெய்வது அவரின் பாணி.” என விவரிப்பாகச் சொல்கிறார்.

தன் மகன் டெரி மெபேனுக்கு ஒற்றைப் பெற்றோராக இருக்கும் மெல்பா மெபேன், தன் பிள்ளையை தான் வேலைசெய்த பேரங்காடி பகுதியிலேயே வளர்த்திருக்கிறார். தற்போது நிதி ஆலோசகராகப் பணியாற்றும் டெரி, தன் தாயாரின் வளர்ப்பையும் வேலையையும் குறித்து மனமுருகிச் சொல்கிறார்.

மாலை 7 மணி வாக்கில் என் தாத்தாபாட்டி என்னைக் கூட்டிச் செல்ல வரும்போது, நான் ஓடிப்போய் கடைக்குள் எங்காவது நுழைந்துகொள்வேன்; இரவு 9 மணிக்கு அம்மாவுடன் தான் வீட்டுக்குக் கிளம்புவேன்; அதையெல்லாம் மறக்கவே முடியாது என மலரும் நினைவுகளைப் பகிர, தொலைக்காட்சிப் பார்வையாளர்கள் உச் கொட்டியபடியே பார்த்துச் செல்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com