தென்கொரியா வந்தடைந்த 2ஆவது அமெரிக்க நீர்மூழ்கி கப்பல்: கொரிய தீபகற்பத்தில் பதற்றம்!

தென்கொரியா வந்தடைந்த 2ஆவது அமெரிக்க நீர்மூழ்கி கப்பல்: கொரிய தீபகற்பத்தில் பதற்றம்!

கொரியத் தீபகற்பத்தில் நிலவும் பதற்றநிலையில், அமெரிக்காவின் இரண்டாவது நீர்மூழ்கிக் கப்பல் இன்று திங்கட்கிழமை தென்கொரியாவை வந்து அடைந்தது.

கொரியப் போருக்குப் பின்னர், நாற்பதாண்டுகள் கழித்து, முதல் முறையாக, கடந்த வாரம் அமெரிக்காவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று தென்கொரியாவுக்கு அனுப்பப்பட்டது. யுஎஸ்எஸ் கெண்டக்கி எனும் அமெரிக்காவின் அந்த பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல் நீர்மூழ்கி 1980-க்குப் பிறகு கடந்த செவ்வாய் அன்றுதான் தென்கொரியாவுக்கு வந்தது. வடகொரியாவின் அணுஆயுதத் தாக்குதலை எதிர்கொள்வது எப்படி என்பது பற்றி, தென்கொரியாவும் அமெரிக்காவும் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளன. இந்த நேரத்தில் யுஎஸ்எஸ் கெண்டக்கி கப்பல் வந்திருப்பது, முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அதன் வருகையை அடுத்த நாளே, வடகொரியா தரப்பு இரண்டு பாலிஸ்ட்டிக் வகை ஏவுகணைகளைச் செலுத்தி தங்கள் வலுவைக் காட்டியது. அதைத் தொடர்ந்தும் கடந்த சனிக்கிழமை அன்று தாழ்வாகப் பறந்து இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் சிறு இறக்கை ஏவுகணைகளையும் ஏவிக் காட்டியது. இரண்டு தரப்பும் தங்களின் படை பலத்தைக் காட்டிவருவதால், கொரியத் தீபகற்பப் பகுதியில் போர்ப் பதற்றம் கூடியுள்ளது.

இதில் எரியும் பிரச்னைக்கு எண்ணெய் ஊற்றும்படியாக, அமெரிக்கப் படைக்குச் சொந்தமான யுஎஸ்எஸ் அன்னபோலிஸ் என்கிற இன்னொரு அணுசக்தி நீர்மூழ்கியும் தென்கொரியாவுக்கு வந்து சேர்ந்துள்ளது. தென்கொரியாவின் தென்பகுதித் தீவான ஜெஜுவுக்கு இன்று திங்கட்கிழமை இந்தக் கப்பல் வந்தடைந்தது என்றும் பெயர் குறிப்பிடப்படாத இராணுவ ஒத்திகைக்காக இராணுவத் தளவாடங்களை தயார் செய்யப்படுவதாக தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இரண்டு நாடுகளின் கடற்படைகளும் இந்தக் கப்பலின் வருகையால் கூட்டு படைப் பயிற்சியை வலுப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் இரு தரப்பு கூட்டு தொடங்கி 70ஆண்டுகள் ஆவதையொட்டி சிறப்பு ஒத்திகைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தென்கொரிய கடற்படைத் தரப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், இன்று வந்த அன்னபோலிஸ் நீர்மூழ்கிக் கப்பலானது கெண்டக்கியைப் போல, ஆணு ஆயுதங்களைக் கொண்டது அல்ல என்றும் எதிரித் தரப்பு கப்பல்கள், நீர்மூழ்கிகளை அழிக்கும் திறன் கொண்டது என்றும் கூறப்படுகிறது.கொரியத் தீபகற்பத்தில் ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா மூன்று நாட்டு கடற்படைகளும் கடந்த செப்டம்பரில் நீர்மூழ்கி எதிர்ப்புக் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டது, நினைவிருக்கலாம்.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com