அமெரிக்காவில் டென்னஸி மாகாணத்தில் நாஷ்வில்லியில் திங்கள்கிழமை தனியார் பள்ளியில் துப்பாக்கி ஏந்திய இளம்பெண் கண்மூடித்தனமாக சுட்டதில் 3 குழந்தைகளும், 3 பெரியவர்களும் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் துப்பாக்கியால் சுட்ட அந்த இளம்பெண்ணும் போலீஸார் சுட்டதில் பலியானார் 6 வது கிரேடு வரை உள்ள அந்த தனியார் பள்ளியில் சுமார் 200 மாணவர்கள் படித்து வருகின்றனர். 33 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
சுமார் 28 வயதுடைய நாஷ்வில்லியை சேர்ந்த அந்த இளம் பெண் யார்? அவர் எதற்காக இந்த பள்ளிக்கு வந்து கண்மூடித்தனமாக சுட்டார்? அவருக்கும் இந்த பள்ளிக்கும் என்ன தொடர்பு என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே அந்த பெண், பள்ளியின் முன்னாள் மாணவி என்பது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் பள்ளிகளில் வன்முறை நடப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு டெக்ஸாஸில் ஒரு பள்ளியில் மர்ம நபர் கண்மூடித்தனமாக சுட்டதில் சிலர் உயிரிழந்தனர். வெர்ஜீனியாவில் ஒரு பள்ளியில் மாணவரே ஆசிரியரை சுட்டுக் கொன்ற சம்பவம் நடந்தது. கடந்த வாரம் டென்வரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பள்ளி நிர்வாகிகள் இருவர் காயமடைந்தனர்.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 6 பேரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். ஒரு போலீஸ் அதிகாரிக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. போலீஸார் சுட்டதில் அந்த மர்மப் பெண்ணும் பலியானார்.
பள்ளியில் படித்துவந்த இதர மாணவர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அருகில் இருந்த கிறிஸ்தவ தேவாலயத்துக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டு அதன் பின் அவர்களின் பெற்றோர்களுடன் அனுப்பிவைக்கப்பட்டனர்.
“நடந்த சம்பவம் நெஞ்சை உருக்குகிறது. பலியான குழந்தைகளின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த நகரத்தின் மக்கள் உங்கள் பக்கம் இருக்கிறார்கள்” என்று நகர மேயர் ஜான் கூப்பர் டுவிட்டர் மூலம் அனுதாபச் செய்தி வெளியிட்டுள்ளார்.
திடீரென போலீஸார் வரும் வாகனத்தின் சைரன் ஒலி கேட்டது. அதைத் தொடர்ந்து தீயணைப்பு வண்டிகளும் வந்தன. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால், நான் அதை எனது அலைபேசியில் படம் பிடித்தேன் என்று சம்பவ இடத்துக்கு அருகில் இருந்த ஜோஸன் ரியோடிகா என்ற பெண்மணி கூறினார். முதலில் இதை நம்பவில்லை. ஆனால், டி.வி.யில் செய்தி பார்த்த்தும் சம்பவத்தை உறுதிப்படுத்திக் கொண்டேன் என்றார் அவர்.
தனியார் தொலைக்காட்சி நிலைய நிருபர் ஹன்னா மெக்டொனால்டு கூறுகையில், எனது மாமியார் அந்த பள்ளியில் அலுவலகத்தில் பணி செய்து வருகிறார். காலையில் சிறிது நேர இடைவெளிக்கு வெளியே சென்றுவிட்டு மீண்டும் பள்ளிக்குத் திரும்பியபோது துப்பாக்கி சத்தம் கேட்டதாக அவர் கூறியதாக எனது கணவர் என்னிடம் கூறினார் என்று ஒளிபரப்பின்போது ஹன்னா தெரிவித்துள்ளார்.
கோவனன்ட் பள்ளி என்று அழைக்கப்படும் அந்த பள்ளி 2001 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாஷ்வில்லியின் தெற்கு பகுதியில் செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளிக்கு அருகிலேயே முக்கிய பல்கலைக்கழகங்களும் செயல்பட்டு வருகின்றன.
துப்பாக்கி ஏந்திய அந்த இளம் பெண், பள்ளியின் பக்கவாட்டில் உள்ள நுழைவு வாயில் வழியாக உள்ளே வந்து இரண்டாவது தளத்துக்குச் சென்று கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். எனினும் போலீஸார் பதிலுக்கு சுட்டதில் அந்த பெண் பலியானர் என்று போலீஸ் அதிகாரி டான் ஆரோன் தெரிவித்தார்.