ஆசியாவின் மிகப்பெரிய துலிப் தோட்டம்!

ஆசியாவின் மிகப்பெரிய துலிப் தோட்டம்!

ஆசியாவின் மிகப்பெரிய துலிப் தோட்டம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட உள்ளது

ஸ்ரீநகரில் சுமார் 30 ஹெக்டேர் நிலப்பரப்பில் கண்களுக்குக் குளிர்ச்சியாகப் பரந்து விரிந்து கிடக்கும் இந்த துலிப் தோட்டமானது ஜபர்வான் மலைத்தொடரின் அடிவாரத்தில் உலகப் புகழ்பெற்ற தால் ஏரியின் கரையில் அமைந்துள்ளது.

பல்வேறு வகைகள், வண்ணங்கள் மற்றும் வாசனை கொண்ட 16 லட்சம் துலிப் மலர்களால் சூழப்பட்டுள்ள இந்த தோட்டமே ஆசியாவின் மிகப்பெரிய துலிப் தோட்டமாகக் கருதப்படுகிறது. தால் ஏரிக்கரையில் வண்ண மலர் கம்பளம் விரித்தாற் போன்ற தோற்றம் காட்டும் இந்த பூந்தோட்டம் மார்ச் 19 அன்று பார்வையாளர்களுக்காக திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தோட்டத்தின் பொறுப்பாளர் இனாம்-உல்-ரஹ்மான் , தோட்டத்தில் துலிப் மலர்கள் பூக்க ஆரம்பித்துவிட்டதாகவும், துலிப் மலர் கம்பளம் பார்வையாளர்களை மயக்கும் விதத்தில் அற்புதமான ஜாலம் காட்டும் விதத்தில் இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

அத்துடன் “இந்த ஆண்டு தோட்டத்தில் நான்கு புதிய வகைகள் உட்பட 68 வகையான 16 லட்சம் டூலிப் மலர்கள் இருக்கும். இது இந்தப்பூந்தோட்டத்திற்கு மேலும் புதுமையையும் அழகிய தோற்றத்தையும் கொடுக்கும்” என்றும் ரெஹ்மான் கூறினார்.

இங்கு 100க்கும் மேற்பட்ட தோட்டக்காரர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக மலர் கம்பளம் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

துலிப் தோட்டத்தின் தலைமைத் தோட்டக்காரர் முகமது யூசுப் கூறுகையில், தோட்டத்தில் ரகவாரியாக காலவரிசைப்படி முதலில் நடப்பட்டவை, இடையில் நடப்பட்டவை, இறுதியில் நடப்பட்டவை என வரிசைக் கிரமப்படி துலிப் வகைகள் அணிவகுத்துள்ளன. பார்வையாளர்கள் வித்தியாசமான தோற்றம் பெறுவதற்கு ஏற்ற வகையில் துலிப்கள் அங்கு நடப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். துலிப் மலர்கள் உயிர்வாழ்வதற்கு குறைந்த வெப்பநிலை தேவை என்று கூறும் ரெஹ்மான் "20 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை நிலவுவதால், இந்த ஆண்டு துலிப் மலர்கள் ஆரம்பத்தில் பூத்திருப்பதால் தோட்டம் முன்கூட்டியே திறக்கப்படுகிறது." என்றும் தெரிவித்தார்.

சொர்க்கத்தில் இருப்பது போன்ற உணர்வைத் தரும் இந்தப் பூக்களின் கம்பளம், ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலாப் பயணிகளையும் உள்ளூர் மக்களையும் வெகுவாகக் கவர்ந்து வருகிறது.

2020 ஆம் ஆண்டில், 3.60 லட்சம் சுற்றுலாப் பயணிகள் பூங்காவிற்கு வருகை தந்ததன் மூலம், எண்ணற்ற வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் லட்சக்கணக்கான துலிப் மலர்களின் அழகை ஒருங்கே ஓரிடத்தில் வெகு சிறப்பாகக் காண முடிந்தது. உலகின் மிகப்பெரிய துலிப் தோட்டம் என்று அழைக்கப்படும் நெதர்லாந்தில் உள்ள புகழ்பெற்ற கியூகென்ஹாஃப் மலர் தோட்டத்திலிருந்து கூட சுற்றுலாப் பயணிகள் கடந்த ஆண்டு இந்த ஆசியாவின் மிகப்பெரிய துலிப் தோட்டத்திற்குச் வந்து சென்றதாக ரெஹ்மான் கூறினார்.

2007 ஆம் ஆண்டு ஜம்மு மற்றும் காஷ்மீர் முதல்வர் குலாம் நபி ஆசாத் அவர்களால் திறந்து வைக்கப்பட்டதில் இருந்து இந்த தோட்டம் பள்ளத்தாக்கின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com