ஒரு மரக்கன்றாவது நட்டு வளர்க்க வேண்டும். வனத்துறையினரின் வேண்டுகோள்.

ஜூன் 5, உலக சுற்றுச்சூழல் தினம்!
ஒரு மரக்கன்றாவது நட்டு வளர்க்க வேண்டும். வனத்துறையினரின் வேண்டுகோள்.

“ஸ்ஸ் அப்பா என்ன வெயில். இந்த சூரியனுக்கு கொஞ்சம் கூட நம்ம மேல கருணையே இல்லையே” எனப் புலம்பி வரும் நம்மிடம்  “வெப்பத்தை தணிக்க  நீங்கள் என்ன செய்தீர்கள்?”  என அந்த சூரியன் திருப்பிக் கேட்டால் எத்தனை பேரால் பதில் சொல்ல இயலும். ஆம். நம் வாழ்நாளில் மரத்தின் நிழல்களை நாடும் நாம் ஒரு மரக்கன்றையாவது  நட்டிருக்கிறோமா? அல்லது வளர்ந்து நிற்கும் மரம் செடி கொடிகளையாவது நீர் ஊற்றி பராமரித்து உள்ளோமோ? அல்லது பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்துள்ளோமோ? என்றால்  இல்லை என்பதுதான் பெரும்பாலோரின் பதிலாக வரும். சுற்றுச்சூழல் தினமான இன்று வனத்துறையினர் விடுத்துள்ள இந்த வேண்டுகோளைப் படியுங்கள். 

 
பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து இயற்கை வளத்தை பாதுகாப்போம் என உலக சுற்றுச்சூழல் தினமான இன்று உறுதிமொழி எடுத்து நடப்போம் வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் 1973 ஆம் ஆண்டு உலக முதல் உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடி வருவதுடன்  பூமியில் இயற்கையை பாதுகாப்பதன் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வுகளும்  ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கடல் மாசுபாடு, புவி வெப்பமயமாதல், அதிக மக்கள்தொகை, வனப்பரப்பின் அழிவு, வனவிலங்குகள் மீதான தாக்குதல்  போன்றவற்றால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதனை கட்டுக்குள் வைத்து இயற்கையை பாதுகாப்பதன் மூலம் உலக சுற்றுச்சூழலை நல்ல நிலையில் வைத்திருக்க இயலும். இதை வலியுறுத்தியே நாடு முழுவதும் மே மாதம் துவங்கி ஜூன் ஐந்தாம் தேதி வரை உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை வனத்துறை மற்றும் இதர அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகள் மற்றும்  தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மக்கள் மத்தியில் நடத்தி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளை மையப் படுத்தியே விழிப்புணர்வுகள் தரப்படும். இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருள் “பிளாஸ்டிக் மாசுபாட்டை வெல்வோம்” என்பதாகும். தமிழ்நாடு வனத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் வனப்பகுதிக்குள் பிளாஸ்டிக் தவிர்ப்பு நடவடிக்கை அதி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது. வனத்துறையில் சரகங்கள் வாரியாக மக்களிடம் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணிகள், கருத்தரங்கம், பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி போன்றவற்றை நடத்தி வருகின்றனர்.

பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களை கொண்டு மனப்பரப்பின் அளவை 33 சதவிகிதமாக உயர்த்துவது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மரக்கன்றுகள் நடும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட வனத்துறையில் மே ஒன்றாம் தேதியிலிருந்து மலை கிராமங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் மரம் நடுதல் மற்றும் வனவிலங்குகளை பாதுகாப்பது தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இரண்டு லட்சம் மரக்கன்றுகளை வனத்தை ஒட்டி உள்ள காப்பு காடுகள் மற்றும் தனியார் நிலங்களில் நடுவதற்கு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

வனத்துறை அதிகாரிகள் கூறுகையில் “நாட்டில் வனத்தின் பரப்பளவு 33 சதவிகிதம் இருந்தால் மட்டுமே சுற்றுச்சூழல் பாதுகாப்பான நிலையில் இருக்கும். அதற்காகத்தான் வனப்பரப்பை அதிகரிக்கும் நோக்கில் மரக்கன்றுகள் நடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. இயற்கை வளத்தை பாதுகாப்பதன் மூலம்தான் மனிதன் நலமுடன் வாழ இயலும். ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்றையாவது நட்டு வளர்த்திட வேண்டும். அதேபோல் பிளாஸ்டிக் எனும் அரக்கன் உலகம் முழுவதும் பரவி கிடைக்கிறது. அதனால் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து அதனை அடியோடு ஒழிக்கும் பணியில் மக்கள் ஈடுபட வேண்டும். துணிப்பை காகிதப்பை  பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் அப்போதுதான் இயற்கையை நம்மால் பாதுகாக்க முடியும்“ என்றனர்.

வனத்துறையினர் சொல்லித்தான் நாம் மரக்கன்றுகளை வைக்க வேண்டும் என்றில்லாமல் வீட்டுக்கு ஒரு மரம் வளர்த்து சுற்றுச்சூழல் காக்க வேண்டியது நமக்கு இடமளித்திருக்கும் இந்த மண்ணுக்கு நாம் செய்ய வேண்டிய நன்றியாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com